721.

     அடியர் நெஞ்சத்த ருட்பெருஞ் சோதிஓர்
     படிவ மாகும்ப டம்பக்க நாதரே
     நெடிய மாலுக்கு நேமி அளித்தநீர்
     மிடிய னேன்அருள் மேவ விரும்பிரோ.

உரை:

     அடியார்களின் நெஞ்சின்கண் அருட்பெருஞ்சோதி வடிவமாகத் திகழும் படம்பக்க நாதரே, நெடிய திருமாலுக்குச் சக்கரப்படை உதவியருளிய நீவிர் வறியனாகிய எனக்கு உம் அருட்செல்வம் எய்த விரும்ப மாட்டீர் கொல்லோ. எ.று.

     சிவனது திருவடியை நெஞ்சிற் கொண்ட பெருமக்கள் அடியர் எனப்படுவர். அவர்களது நெஞ்சின்கண் அருள் ஞானச்சுடர் திகழும் பெரிய சோதி வடிவமாய் விளங்குவதுபற்றி, “அருட்பெருஞ்சோதியோர் படிவமாகும்” என்றும், சகளவுருவில் படம்பக்கநாதர் என்றும் விளங்குகின்றார் என்பதாம். நெடிதோங்கிய திருவுருவ முடையனாதலால், திருமாலை, நெடியமால் என்றும், அவர் கண்ணைப் பறித்து மலரெனச் சிவன் திருவடியிற் பெய்து வழிபட்டதனால் சக்கரப்படை அருளப்பட்ட மையின் “நெடிய மாலுக்கு நேமியளித்த நீர்” என்றும் உரைக்கின்றார். நேமி - சக்கரப்படை. மிடியன் - இல்லாதவன். அருட் செல்வம் சிறப்புடைத் தென்பது கொண்டு “அருள்மேவ” எனவும், சிவனது அருளாலன்றி அஃது எய்தாமையின் “மேவ விரும்பிரோ” எனவும் இசைக்கின்றார்.

     பாடாண்டிணைத் தலைவிக்குச் சிவனது அருள் வேண்டித் தோழி இறைஞ்சியவாறாம்.

     (9)