722. மதிகொள் அன்பர்ம னமெனும் திவ்வியப்
பதிகொள் செல்வப்ப டம்பக்க நாதரே
விதிகொள் துன்பத்தை வீட்டி அளித்தநீர்
துதிகொள் வீர்என்து யரைத்து ரத்துமே.
உரை: சிவஞானமாகிய செந்நெறி கொண்ட அன்பர்களுடைய மனமாகிய தெய்வத்தூய்மை பொருந்திய கோயில் கொண்ட அருட் செல்வரான படம்பக்க நாதரே, ஊழ்வினை வயத்தால் எமக்கெய்தும் துன்பத்தைப் போக்கியருளிய நீர் யான் செய்யும் துதியை ஏற்று என் துயரத்தைப் போக்கியருள்வீராக. எ.று.
மதியென்றது சிவஞானத்தை. சிவனது திருவடிக்கன்பு சிவ ஞானத்தால் எய்துதலின், அடியார்களை, “மதிகொள் அன்பர்” என்று கூறுகின்றார். சிவனடியே சிந்திப்பது சிவஞானமெனச் சேக்கிழார் பெருமான் தெரிவிப்பது அறிக. மனத்தையே தூய கோயிலாகக் கொள்வதுபற்றி, “மனமெனும் திவ்விய பதி” என மொழிகின்றார். திவ்விய என்னும் வடசொல் தெய்வம் விளங்கும் எனப் பொருள்படுவது. “நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்” (தில்லை) என்று திருநாவுக்கரசர் கூறுகின்றமை காண்க. திருவருட் பெருஞ்செல்வராகலின், படம்பக்க நாதரைச் “செல்வப் படம்பக்க நாதரே” எனச் செப்புகின்றார். விதி - ஊழ்த்துவரும் வினை. அதன் பயனாகிய துன்பம் வந்து தாக்காவாறு காத்தலை நினைந்து, “விதிகொள் துன்பத்தை வீட்டியளித்த நீர்” என்று விளம்புவதுடன், அன்பராயினார் வழுத்தும் துதிகளை அன்புடன் ஏற்று அவரது துன்பத்தைத் துடைப்பது தோன்ற, “துதிகொள்வீர்” என்றும், “என் துயரைத் துரத்துமே” என்றும் சொல்லுகின்றார்.
இப் பாட்டுப் பொதுவாய்த் தோன்றினும், பாடாண் திணைத் துறைக்கும் பொருந்துமாறு கண்டுகொள்க. (10)
|