724.

     மத்தனைவன் நெஞ்சகனை வஞ்சகனை வன்பிணிகொள்
     பித்தனைவீண் நாள்போக்கும் பேயேனை நாயேனை
     முத்தனையாய் உன்றன் முளரித்தாட் காளாக்க
     எத்தனைநாள் செல்லும் எழுத்தறியும் பெருமானே.

உரை:

     உன்மத்தனும் வன்னெஞ்சனும் வஞ்சம் புரிபவனும் வலிய நோயுற்ற பித்தனும் நாளை வீணே கழிக்கும் பேயனும், நாயனையானுமாகிய என்னை, முத்துப் போன்ற உன்னுடைய தாமரை மலர் போலும் திருவடிக்கு ஆளாக்குதற்கு, எழுத்தறியும் பெருமானே, இன்னும் எத்தனை நாள் வேண்டும், கூறியருள்க. எ.று.

     எழுத்தறியும் பெருமானாகிய உன் திருவடிக்கு ஆளாதற்குத் தடையாகத் தம்பால் பல்வகைக் குற்றங்கள் இருப்பதை வள்ளற் பெருமான் உணர்கின்றார். வாய் விட்டுரைக்கின் மனம் ஆறுதல் பெறும் என்ற கருத்தால் மத்தன், வன்னெஞ்சன் என்பன முதலியவற்றை அடுக்கி யுரைக்கின்றார். மத்தன் - உன்மத்தன். காரணமொன்று மின்றியே வாயில் வந்தது பேசுபவன். எளிதில் உருகாத வன் மனமுடையவனை “வன்னெஞ்சகன்” என்கின்றார். வஞ்சகன் - வஞ்சம் புரிவதையே நெஞ்சில் நினைந்த வண்ணம் இருப்பவன்; மந்திர மருந்துகளால் நீக்க முடியாத வலிய நோயுற்றுப் பித்தேறியவன் என்பதற்கு “வன்பிணி கொள் பித்தன்” என வுரைக்கின்றார். பயனுடைய சொல்லும் செயலுமின்றி எங்கும் திரிந்தலைபவனை, “வீணாள் போக்கும் பேயன்” என்று கூறுகின்றார். பிறரைக் கண்டவழிப் பொறாமை யுறுதலின் “நாயேன்” என்று நவில்கின்றார். தெளிவும் ஒளியும் உடைமை நினைந்து “முத்தனையாய்” என்று எழுத்தறியும் பெருமானை ஏத்துபவர், அவருடைய திருவடிக்கு ஆட்பணி செய்யும் அடிமை நிலை தமக்கு எய்த வேண்டுமெனப் பண்ணாளாய் வேண்டியும் எய்தாமை நோக்கி, “உன்றன் முளரித் தாட்கு ஆளாக்க எத்தனைநாள் செல்லும்” என்று இயம்புகின்றார். திருவடிக்காளாய வழி நலம் பலவும் உண்டாம் என்பதை, “நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கு ஆளாய அன்பு செய்வோம் மட நெஞ்சே யரனாமம், கோளாய்நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறமருளிக் கோளாய நீக்குபவன் கோளிலியெம் பெருமானே” (கோளிலி) என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க.

     இதன்கண், எழுத்தறியும் பெருமானுக்கு ஆளாதல் விருப்பம் நிறைவுற எத்தனைக் காலமாம் என்று வேண்டியவாறாம்.

     (2)