726. மைப்பிடியும் கண்ணார் மயல்உழக்கச் செய்வாயோ
கைப்படிய உன்றன் கழல்கருதச் செய்வாயோ
இப்படிஎன் றப்படிஎன் றென்னறிவேன் உன்சித்தம்
எப்படியோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
உரை: ஐயனாகிய எழுத்தறியும் பெருமானே, மை தீட்டும் கண்ணையுடைய மகளிரால் உண்டாகும் மையலிற் கிடந்து வருந்தச் செய்வாயோ, கைகள் இரண்டாலும் பொருந்தத் தொழுது உன் திருவடியை நினையச் செய்தருள்வாயோ, இவ்வகை யென்றும் அவ் வகை யென்றும் யான் ஒரு வகையும் அறிகிலேன்; உனது திருவுள்ளம் எவ்வகையோ, தெரிவித்தருள்க. எ.று.
கூந்தலை யொப்பனை செய்து, முகங் கழுவிக் கண்கட்கு மைதீட்டி அழகு செய்துகொள்வதால் பொலிவு தோன்றிக் காணும் ஆடவருள்ளத்தில் காம வேட்கையை யெழுப்பி அறிவை மயக்குதலால், “மைப்படியும் கண்ணார் மயலுழக்கச் செய்வாயோ” என்கின்றார். இரு கையும் நன்கு பொருந்தத் தலையுச்சியிலும் மார்பிலும் நிறுத்தி இறைவன் திருவடித் தாமரையை நினைத்து வழிபட வேண்டுதலின் அதனைக் “கைப்படிய உன்றன் கழல் கருதச் செய்வாயோ” என்று உரைக்கின்றார். திருவடியைத் தொழுதற்கும் தொழுதலின்றி மகளிர் மையலில் உழத்தற்கும் திருவருளின் இயக்கம் காரணம் என்னும் கருத்தினராதலின், “மயல் உழக்கச் செய்வாயோ” என்றும் கூறுகின்றார். மகளிர் மயல் இத் திறத்தது என்றும், திருவடி தொழுதல் அத் திறத்தது என்றும் அறிவுறுத்துவார் பிறர் இன்மை தோன்ற, “இப்படி யென்று அப்படியென்று என்னறியேன்” என்று இயம்புகின்றார். உன் திருவுள்ளத்தின் படியே யான் இயங்குகின்றேன்; எனக்கென ஒரு செயல் இல்லை என்பது உணர்த்தவே இங்ஙனம் கூறுகின்றார். (4)
|