728. தீதறிவேன் நன்கணுவும் செய்யன்வீண் நாள்போக்கும்
வாதறிவேன் வஞ்சகனேன் வல்வினையேன் வாய்மையிலேன்
சூதறிவேன் மால்அயனும் சொல்லரிய நின்பெருமை
யாதறிவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
உரை: ஐயனாகிய எழுத்தறியும் பெருமானே, தீதனைத்தும் யான் இனிதறிவேன்; நல்லதை அணுவளவும் செய்ததில்லேன்; நாளை வீணிற் கழிக்கும் வகையினை நன்கறிவேன்; வஞ்சனையும் வல்வினையும் பெருக வுடையேன்; வாய்மை யறவேயில்லாதவன்; சூது பலவும் எனக்குத் தெரியும்; திருமாலும் பிரமனும் சொல்லமுடியாத நினது பெருமையில் யாதினை அறிவேன்? எ.று.
தம்முடைய செய்கைக்கண் தீது மிகவுண்டேயன்றி நல்லது அணுவளவும் இல்லை என்று காட்டற்குத் “தீதறியேன் நன்கு அணுவும் செய்யேன்” என்று இசைக்கின்றார். நன்கு - நற்செயல், நாளை வீணே கழிப்பவரை யாரும் விரும்பாது இகழ்வாராக அவரோடு வாதம் புரிந்து கெடுவது பற்றி, “வீண் நாள் போக்கும் வாதறிவேன்” என்று விளம்புகின்றார். நெஞ்சில் வஞ்சனை மிக்கிருத்தலின் “வஞ்சகன்” என்றும், செயல் பலவும் தீவினையாதலால் “வல்வினையேன்” என்றும், இவற்றால் வாய்மையை நினைக்கவும் பேசவும் இயலாதவனாயினேன் என்பாராய், “வாய்மை யிலேன்” என்றும், வாய்மை நிலவ வேண்டியவிடத்து பொய்ம்மையும் சூதும் நிறைந்தமை கூறலுற்று, “சூதறிவேன்” என்றும் சொல்லுகின்றார். எனினும் இடையிடையே இறைவன் பெருமையைப் பேசி உய்தி பெறலாமே எனின், அப்பெருமை திருமால் பிரமன் முதலிய தேவ தேவர்கட்கே அளவிட முடியாத தாகலின், யான் அறிந்து சொல்ல வல்லே னல்லேன் என உரைக்கின்றார்.
இதன்கண், எனக்குச் சூதும் வாதும் தீதும் தெரியுமல்லது, இறைவன் பெருமை யாதும் தெரியாது எனக் கூறியவாறாம். (6)
|