729.

     மாறாத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே
     கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன்
     ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில்
     ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே.

உரை:

     ஐயனாகிய எழுத்தறியும் பெருமானே, நீங்காத வலிய நோயினால் மயங்கி மனம் சோர்ந்து வாயாற் கூற முடியாத துன்பமாகிய கொடிய கடலில் வீழ்ந்து அடியனாகிய யான் நோயின் வெம்மை ஆறாமையால் அலறி யழுகின்றேன்; எனது அழுகுரல் உன் திருச் செவியில் ஏறுவதில்லையோ, கூறுக. எ.று.

     தீராத கொடிய நோயால் அறிவு மயங்கினமை தோன்ற, “மாறாத வன்பிணியால் மாழாந்து” என்றும், அதனால் மனச்சோர்வு கொண்டமை புலப்பட “நெஞ்சயர்ந்து” என்றும், இவ்வாற்றால் துன்பம் மிகுந்து வருந்துகின்றமை விளங்கக் “கூறாத துன்பக் கொடுங் கடற்குள் வீழ்ந்து ஆறாது அரற்றி அழுகின்றேன்” என்றும், அழுகின்ற தமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை “அடியேன்” என்றும் உரைக்கின்றார். திருவடியே பற்றி நிற்கும் அடியனாகவும் எனது பிணி நீங்காமையால், யான் செய்யும் முறையீடு உன் திருச்செவியிற் புகுந்திலது போலும் என்பாராய், “நின் செவியில் ஏறாதோ” என மொழிகின்றார்.

     இதன்கண், வன்பிணியால் நோயுற்று வருந்தி யழுதும் அது தீர்க்கப் படாமை சொல்லி முறையிட்டவாறு பெறப்படும்.

     (7)