730. உண்ணாடும் வல்வினையால் ஓயாப் பிணிஉழந்து
புண்ணாக நெஞ்சம் புழுங்குகின்றேன் புண்ணியனே
கண்ணாளா உன்றன் கருணை எனக்களிக்க
எண்ணாயோ ஐயா எழுத்தறியும் பெருமானே.
உரை: ஐயனாகிய எழுத்தறியும் பெருமானே, உடற்குள்ளேயே கிடந்து வருத்தும் வல்வினையால் பெருகுகின்ற நோயால் துன்புற்று நெஞ்சம் புண்ணாகி வெம்புகின்றேன்; புண்ணியப் பொருளாக வுள்ளவனே, கண்ணினுள் இருந்து இயக்குபவனே, உனது திருவருளை எனக்களிக்க உள்ளத்தே எண்ண மாட்டாயோ? எ.று.
உடற்குள் உயிரைப் பற்றிப் பிணித்திருப்பதாகலின் “உண்ணாடும் வல்வினை” என்றும், அது காரணமாக உடற்கு நோய் எய்துமாறு விளங்க “வல்வினையாற் பிணியுழந்து” என்றும், அதுவும் சுருங்காமற் பெருகுமாறு பற்றி “ஓயாப் பிணியுழந்து” என்றும் உரைக்கின்றார். பிணியால் உளதாய மனநிலையை “நெஞ்சம் புண்ணாகப் புழுங்குகின்றேன்” என்று இசைக்கின்றார். தம்பால் நின்ற வல்வினையும் ஓயாப் பிணியும் இறைவனது புண்ணியப் பொருளாம் தன்மையை இனிதுணரச் செய்தலின் “புண்ணியனே” என்று புகழ்கின்றார். கண்ணாளன் - கண்ணாய் நின்று ஆள்பவன். திருவருளல்லது வல்வினையையும் அது காரணமாக வரும் பிணியையும் போக்குவது பிறிதின்மையின் “உன்தன் கருணை எனக்களிக்க எண்ணாயோ” என விண்ணப்பிக் கின்றார்.
இதன்கண், இறைவன் திருவருள்தான் வினைத் தொடர்பையும், பிணிகளையும் போக்கவல்லது என்பது உணரப்படுமாறறிக. (8)
|