731.

     புன்செய்கை மாறாப் புலையமட மங்கையர்தம்
     வன்செய்கை யாலே மயங்குகின்ற வஞ்சகனேன்
     கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல்
     என்செய்வேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.

உரை:

     ஐயனாகிய எழுத்தறியும் பெருமானே, புன்மைச் செயல்களின் நீங்காத புலைத் தன்மையை யுடைய இளமகளிருடைய வலிய செய்கைகளால் மயக்கமுறுகின்ற வஞ்சனாகிய யான், அச்சச் செய்கை யினின்றும் மாறுபடாத யமன் வருவானாயின் என்ன செய்வேன்? எ.று.

     புன்செய்கை - புன்மைச் செய்கை! செய்தார்க்குக் கீழ்மை பயக்கும் அற்பச் செயல். புலைத்தன்மை - பொல்லாங்குடைமை. இளமை முதுமையாகிய எக்காலத்தும் இத்தன்மை நிலைபெறுவது பற்றி, “மாறாப்புலைய மட மங்கையர்” என்றும், அவர்பால் வன்மொழியும் வன்செய் கையுமே மிக்கிருத்தலால், “மங்கையர்தம் வன் செய்கையாலே” என்றும், அவ் வன்சொல்லும் வன்செயலும் அறிவைச் சிதைக்கின்றமையின், “வன்செய்கை யாலே மயங்குகின்றேன்” என்றும் கூறுகின்றார். மயங்குமிடத்தும் உள்ளொன்றும் புறம்பொன்றுமாக வஞ்சித் தொழுகுமாறு விளங்க, “வஞ்சகனேன்” என மொழிகின்றார். இவ்வாறு வஞ்சக வாழ்வில் தோய்ந்து நாள் கழிப்பேனாயினும், நமன் வரும்போது தடுத்து நிறுத்தும் வலியில்லேனாதலின் எனக்குத் துணை செய்தல் வேண்டும் என்பாராய், “கொன்செய்கை மாறாத கூற்றன் வருவானேல் என் செய்வேன்” என்று உரைக்கின்றார். கொன் செய்கை - அச்சம் தரும் செயல்; உயிர் கவரும் செயல் பற்றி எவர்க்கும் நமன் செயல் அச்சம் தருவ தொன்றாதலின், “கொன் செய்கை மாறாத கூற்றன்” என்றும், “கூற்றன் வருவானேல் என் செய்வேன்” என்றும் இயம்புகின்றார்.

     இதன்கண், மங்கையர் வன்செய்கையில் மயங்கும் யான், கூற்றன் வருங்கால் மாற்றும் வலியின்மையேன் எனக் கூறி வருந்தியவாறாம்.

     (9)