732. சங்குடையான் தாமரையான் தாள்முடியும் காண்பரிதாம்
கொங்குடைய கொன்றைக் குளிர்சடையாய் கோதைஒரு
பங்குடையாய் ஏழைமுகம் பாராது தள்ளிவிட்டால்
எங்கடைவேன் ஐயா எழுத்தறியும் பெருமானே.
உரை: ஐயனாகிய எழுத்தறியும் பெருமானே, கையில் சங்கேந்தும் திருமாலும், தாமரை மலரை யிடமாக வுடைய பிரமனும் முறையே திருவடியும் திருமுடியும் காண்டற் கரிய, தேன் பொருந்திய கொன்றை மாலை சூடிய குளிர்ந்த சடையை யுடையவனே, உமாதேவியை ஒரு பங்கில் உடையவனே, ஏழையாகிய என் முகத்தைப் பார்க்காமல் தள்ளி விடுவாயாயின், எவ்விடம் செல்வேன், அருள் செய்க. எ.று.
வலக்கையில் சக்கரமும் இடக்கையில் சங்கும் ஏந்துவது திருமாலுக்கு இயல்பாதலின், சங்கேந்துதலை விதந்து, “சங்குடையான்” என்கின்றார். “சங்கேந்து மலர்க் குடங்கைப் புத்தேள்” என்பர் காஞ்சிப் புராண முடையார். திருமால் சிவனுடைய திருவடியையும் பிரமன் திருமுடியையும் காண முயன்று மாட்டாராயினமையின், “தாள் முடியும் காண்பரிதாம்” என்று கூறுகின்றார். காண்பரிதாம் என்பது தாளொடும் முடியொடும் தனித்தனி சென்றியையும். கொங்கு - தேன். கோதை - உமாதேவி. பங்கு - கூறு; இடப்பாகத்துக் கூறு என அறிக. தமது தாழ்வு விளங்க “ஏழை” என்றும், புறக்கணிக்கப்பட்டால் என் செய்வது என்ற கலக்க மிகுதியால், “முகம் பாராது தள்ளிவிட்டால் எங்கடைவேன்” என்றும் இசைக்கின்றார்.
இதன்கண், ஏழை யென்று புறக்கணித்து முகம் பாராது தள்ளி விட்டால் புகலிடமேது என வள்ளலார் வருந்துமாறு காணலாம். (10)
|