733. மன்றி னிடைநடஞ்செய் மாணிக்க மாமலையே
வென்றிமழுக் கையுடைய வித்தகனே என்றென்று
கன்றின் அயர்ந்தழும்என் கண்ணீர் துடைத்தருள
என்று வருவாய் எழுத்தறியும் பெருமானே.
உரை: எழுத்தறியும் பெருமானே, அம்பலத்தில் ஆடல் புரியும் மாணிக்க மலையே, வெற்றி தரும் மழுப்படையைக் கையில் ஏந்தும் வித்தகனே, என்று பன்முறையும் சொல்லி ஆவின் கன்றுபோல வருந்தியழும் என் கண்ணினீரைத் துடைத்தற்கு எப்பொழுது வருவாய், கூறுக. எ.று.
அம்பலத்தில் ஆடும் பெருமான் என்பது பற்றி, “மன்றினிடை நடம் செய்” என்றும், செம்மேனி யம்மான் என்பதுபற்றி, “மாணிக்க மலையே” என்றும் கூறுகின்றார். சிவந்துயர்ந்த செம்மேனியனாதலால் “மாணிக்க மாமலை”யென விதந்து உரைக்கின்றார். வெற்றி தரும் விழுமிய படை யென்றற்கு, “வென்றி மழுக் கையுடைய வித்தகனே” என்கின்றார். வித்தகன் - சதுரன்; ஞானவான் என்றுமாம். கன்று என்று பொதுப்பட மொழிதலால் ஆண்கன்று கொள்ளப்பட்டது. தாயை நினைந்த கன்றுபோலச் சிவனை நினைந்து உடல் அயர்ந்து உளம் உருகிப் புலம்புமாறு புலப்படக் “கன்றின் அயர்ந்தழும் என் கண்ணீர் துடைத்தருள” என்றும், சிவனது வரவின்பாலுள்ள சிந்தை மிகுதியால் “என்று வருவாய்” என்றும் இசைக்கின்றார்.
இதன்கண், சிவனை நினைந்து புலம்பும் தம்முன் போந்து அருட் காட்சி தரல் வேண்டுமென வேண்டிக் கொண்டவாறாம். (11)
|