734. மன்னளவில் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர்
தென்னளவும் வேணிச் சிவமே எனஒருகால்
சொன்னளவில் சொன்னவர்தம் துன்பொழிப்பாய் என்பர்அது
என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே.
உரை: எழுத்தறியும் பெருமானே, பெருமையை யளவிட்டு நோக்கில் ஒளி திகழும் மாணிக்கமணி போல வுள்ளாய்; பெரிய தவமுடைய பெரியோர் அழகுமிகும் சடை யணிந்தொளிரும் சிவமே என ஒருமுறை வாய்திறந்து சொல்வாராயின், சொன்ன மாத்திரையே சொன்னவருடைய துன்பத்தைப் போக்குவாய் என்று சொல்லுவார்கள்; ஆனால், அஃது என்னளவில் மெய்யாவது காண்கிலேன். எ.று.
மன் - பெருமை. சிவத்தின் பெருஞ்சோதியை மனத்தால் எண்ணுகின்றவர், “மன்னளவில் சோதி” என வரைந்துகொண்டு, அது மாணிக்கமணியின் மிக்கு விளங்குவது கண்டு, “சோதி யளவில் மணி போல்வாய்” என்று மொழிகின்றார். “மாதவத்தோர் சிவமே என ஒருகாற் சொன்னளவில்” என இயையும். வேணி - சடை. மாதவம் உடையவராதலின், சிவமே யென வாய் திறந்து ஒருகால் சொன்னால், அது பொறாது பானினைந்து போதரும் தாய்போல வந்தடைவர் என்றற்குச் “சிவமே யென ஒருகாற் சொன்னளவில்” வருவர் என்றும், வந்து காலத்தை வீண் போக்காது சொல்லுதற்கு ஏதுவாயிருந்த துன்பத்தைப் போக்குவாய் என்பார், “துன்பொழிப்பாய் என்பர்” என்றும், தாம் பன்முறை வாய்விட்டுக் கூவியழைத்தும் வந்திலை என்பாராய், “அது என்னளவில் காணேன்” என்றும் கூறுகின்றார்.
இதன்கண், மாதவமுடையோர் ஒருகால் அழைப்பின் தாழாது வந்தருளும் சிவத்தின் பேரருளுடைமை வியந்து கூறியவாறாம். (12)
|