735. மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும்
தன்போல்வாய் என்ஈன்ற தாய்போல்வாய் சார்ந்துரையாப்
பொன்போல்வாய் நின்அருள்இப் போதடியேன் பெற்றேனேல்
என்போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே.
உரை: ஒற்றியூர் எழுத்தறியும் பெருமானே, மின்னற் கொடி போன்ற இடையையுடைய மங்கையர்மேல் உண்டாகிய காம வேட்கையால் உடம்பு வெம்மையுறுகின்றேன்; ஆயினும், எனக்கு உயிர் போன்றவனும், என்னைப் பெற்ற தாய் போன்றவனுமாவாய்; கல்லிற் சார்த்தி உரைக்கப்படாத பொன் போன்றுள்ளாய்; உனது திருவருளை அடியனாகிய யான் இப்போது பெறுவேனாயின் எனக்கு ஒப்பாவார் ஒருவரும் இலராவர், காண்க. எ.று.
இளமகளிர், நுண்ணிய ஒளி செய்கின்ற இடையினை யுடையராதலால், “மின் போல்வார்” என்றும், அவர்மேல் எழுகின்ற காமவிச்சை நரம்புக் கால் தோறும் வெப்பத்தை யுண்டு பண்ணுவதால், “இச்சையினால் வெம்புகின்றேன்” என்றும் உரைக்கின்றார். சிவனது பெருந் தன்மையை நினைந்துரைப்பவர், அப்பெருமான் தனக்கு உயிர் போன்றலால், “தன்போல்வாய்” என்றும், தாய்போல் தலையளித்தலால் “என் ஈன்ற தாய் போல்வாய்” என்றும் புகழ்கின்றார். பொன்போலும் திருமேனி நலத்தை வியந்து, மாற்றுக் காண்டற்கு உரைக்கப்படும் பொன் போலாது தனிச்சிறப்புடைய உயர் பொன் என்பாராய், “சார்ந்துரையாப் பொன் போல்வாய்” என்கின்றார். இறைவன் அருட் செல்வனாதலின் அத் திருவருள் தனக்கும் எய்திவிடின், அருட் பேற்றில் தனக்கு நிகராவார் பிறர் இல்லை என்று பெருமிதம் உற்று, “நின் அருள் இப்போது அடியேன் பெற்றேனேல் என் போல்வார் இல்லை” என்று இயம்புகின்றார்.
இதன்கண், காம வேட்கையால் உடல் வெம்மை யுறினும் உள்ளம் அருள் வேட்கை மிக்குறுதலால், அஃது இப்போது கிடைக்கின் நிகராவார் பிறர் இலராவேன் என்று தெரிவித்தவாறாம். (13)
|