736. பூமாந்தும் வண்டெனநின் பொன்னருளைப் புண்ணியர்கள்
தாமாந்தி நின்னடிக்கீழ்ச் சார்ந்துநின்றார் ஐயோநான்
காமாந்த காரம்எனும் கள்ளுண்டு கண்மூடி
ஏமாந்தேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
உரை: திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானே, பூவிடைத் தேன் அருந்தும் வண்டுபோல நினது பொன்னருளைப் புண்ணிய வான்கள் அருந்தி, நின்னுடைய திருவடி நீழலைச் சார்ந்து நின்று மகிழ்கின்றார்கள்; ஐயோ, நான் காமவிருள் என்னும் கள்ளையுண்டு கண்ணை மூடிப் பெறுவது பெறாது ஏமாந்தொழிந்தேன், காண்க. எ.று.
பூமாந்தும் வண்டு - பூவில் ஊறும் தேனை யுண்ணும் வண்டு. பூ, ஆகு பெயர். சிவபெருமானது திருவருளும் அழகிய தேனாய் இன்பம் செய்தலின், “புண்ணியர்கள் பொன்னருளைத் தாம் மாந்தி” என்றும், அதன் விளைவாக அவர்கள் திருவடி நீழலைச் சார்ந்து பேரின்பம் துய்க்கின்றார்கள் என்பாராய், “நின்னடிக் கீழ்ச் சார்ந்து நின்றார்” என்றும் உரைக்கின்றார். அதே நிலையில் தாம் இருக்கும் நிலை மிக்க அங்கலாய்ப்பை விளைவித்தலின் மனம் நொந்து, “ஐயோ நான் காமாந்த காரம் எனும் கள்ளுண்டு” என்றும், அதனால் அறிவிழந்தமையைக் “கண் மூடி” என்றும், இன்பச்சூழல் எய்தா தொழிந்தமையின், “ஏமாந்தேன்” என்றும் இயம்புகின்றார்.
இதன்கண், புண்ணியவான்கள் பெற்ற பொன்னருள் பெறாமைக்கும் காமவிச்சை நல்கும் துன்பச் சூழலில் வீழ்ந்தமைக்கும் வருந்தியவாறாம். (14)
|