737.

     பன்னரும்இப் பார்நடையில் பாடுழன்ற பாதகனேன்
     துன்னியநின் பொன்னடியைச் சூழாதேன் ஆயிடினும்
     புன்னிகரேன் குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே
     என்னருமைத் தாய்நீ எழுத்தறியும் பெருமானே.

உரை:

     ஒற்றியூர் உறையும் எழுத்தறியும் பெருமானே, வாயாற் சொல்லற்கரிய இவ்வுலக நடையில் பாடு மிகப்பட்டு வருந்திய பாதகனாகிய யான், நெருங்கிய நின் பொன் போன்ற திருவடியை நினையா தொழிந்தேன்; ஆயினும், புல்லை நிகர்த்த என் குற்றத்தைப் பொறுத்தற்குரிய பொறுப்பு உனக்கே யுண்டு; எங்ஙனமெனில், என்னுடைய அருமையான தாய் நீ அல்லவா?

     கணந்தோறும் துன்பங்கள் இடையறவு படாமல் வருத்துதல் பற்றிப் “பன்னரும் இப் பார்நடை” என்றும், கொடும் பாவச் செயல்களால் துன்புற்று வருந்தினமை தோன்ற, “பாடுழன்ற பாதகனேன்” என்றும், அன்பால் நினைவார் நெஞ்சிற்குள் மிக விரைந்து போந்து தங்குதல்பற்றி“துன்னிய நின் பொன்னடி” யென்றும், அதனை நினையாதொழிந்த குற்றத்தைச் “சூழாதேன் என்றும் சொல்லுகின்றார். அந்நிலையில் தன்னையும் இறைவனையும் ஒப்ப எண்ணி, தான் புல்லினும் அற்பமானவன் என்றெண்ணி, “புன்னிகரேன்” என்கின்றார். தனக்கு இத்தகைய புல்லிய நிலைமை யுண்டாதற்கு ஏது, செய்துள்ள எண்ணிறந்த பல பெருங் குற்ற மென்பார், “குற்றம்” எனக் குறித்துக் காட்டி, இதற்காக எளியேனை ஒறுத்தலினும் பொறுத்தல் உன்னுடைய பொறுப்பு என்பாராய் “குற்றம் பொறுக்கப் பொறுப்புனக்கே” என்றும், அதற்கு நீ எனக்குத் தாயாவாய் என்பார், “என்னருமைத் தாய் நீ” என்றும் இயம்புகின்றார்.

     இதன்கண், எனக்கு நீ அருமைத் தாயாதலால் என் குற்றங்கட்காக ஒறுப்பதை விடுத்துப் பொறுத்தல் பொறுப்பாம் என்று புகன்றவாறு.

     (15)