738.

     வீட்டுக் கடங்கா விளையாட்டுப் பிள்ளைஎனத்
     தேட்டுக் கடங்காத தீமனத்தால் ஆந்துயரம்
     பாட்டுக் கடங்காநின் பத்தர் அடிப்புகழ்போல்
     ஏட்டுக் கடங்கா தெழுத்தறியும் பெருமானே.

உரை:

     எழுத்தறியும் பெருமானே, வீட்டாருக் கடங்காத விளையாட்டுச் சிறுவனைப்போல நன்ஞானமும் நல்வினையும் தேடிக் கோடற்குரிய நெறிக்கண் நின்றொழுகாத கொடிய மனத்தால் உளவாகும் துன்பங்கள், நின்னுடைய மெய்யன்பர்களின் திருவடிப் பெரும் புகழ் பாடுவார் பாடற் கடங்காது விரிதல்போல, ஏட்டில் எழுதற் கடங்கா. எ.று.

     நன்னெறி நல்லொழுக்க விதிகட்கு அடங்கி யொழுகுமாறு இளமைக் கண் பெற்றோரும் முன் பிறந்தோரும் பிள்ளைகளை அடக்கி யொடுக்கி நல்லோராக்குவர்; விதி விலக்குகட் கடங்கி நடக்கப் பயிற்றுவது இளமைக்கண் வீடும் பள்ளிக்கூடங்களும் செய்தற்குரிய கடமை. அடங்காத பிள்ளைகள் நாட்டில் திரிந்து இளங் குற்றவாளிகளாகி முடிவில் மக்கட் சமுதாயமே கண்டு இகழ்ந்து புறம் பழிக்கும் கீழ் மக்களாகுவர். அப் பிள்ளைகளால் பெற்றோர்கட் குண்டாகும் துன்பம் போல மனமும் சிவஞானமும் சிவபுண்ணியமும் தேடிக் கொள்ளற் கேற்ற ஞானவொழுக்கங்களில் தோய்ந்து ஒழுகாத தீமையை மேற் கொண்டு நல்லறிவுக் கடங்காமல் அளவிடற்கரிய துன்பங்கட்கு முதலாகி விடும். அத் துயரங்களை நம் வள்ளலார் போன்ற அருளறிவுடைய மேலோர் தாம் அறிந்து காட்ட முடியுமாகலின், மெய்த்தொடர்களின் திருவடிப் புகழை உவமமாக நிறுத்தி, “பாட்டுக் கடங்கா நின் பத்தர் அடிப்புகழ் போல்” என்று எடுத்துக் காட்டி, பாட்டும் உரையும் எழுதிய பயிற்சியின் காரியமாதல் பற்றி, “ஏட்டுக் கடங்கா” என இசைக்கின்றார்.

     இதன்கண், சிவஞான சிவபுண்ணியங்களைத் தேடிக் கோடற்கமையாத மனத்தால் உளவாகும் துன்பங்கள் ஏட்டுக்கடங்கா என விளம்பியவாறு.

     (16)