739. பன்னு மனத்தால் பரிசிழந்த பாதகனேன்
துன்னுமல வெங்கதிரோன் சூழ்கின்ற சோடையினால்
நின்னருள்நீர் வேட்டு நிலைகலங்கி வாடுகின்றேன்
இன்னும்அறி யாயோ எழுத்தறியும் பெருமானே.
உரை: எழுத்தறியும் பெருமானே, பன்முறையும் பேசப்படுகின்ற மனத்தின் கோணற் செய்கையால் நற்பான்மையை இழந்த பாதகனாகியயான், மிகுகின்ற மலமாகிய வெவ்விய கதிரவனால் உண்டாகிச் சூழ்ந்து கொள்ளும் வெப்பத்தால் நின்னுடைய அருளாகிய நீரை விரும்பி நிலை கலங்கி வாட்டம் உறுகின்றேன்; என் நிலையை நீ இன்னமும் அறியாய் போலும். எ.று.
அறிந்திருந்தால் இந்த வாட்டம் எனக்கு வந்திராது என்பது குறிப்பெச்சம். நல்வினை செய்த வழி உயர்த்தியும், தீவினை செய்த வழி தாழ்த்தியும் பலராலும் பன்னிப் பேசப்படுவது பற்றி, “பன்னுமனம்” என்றும், பாதகச் செயல்கட்கே துணையாய் இருந்து மிகப் பெருங்கேடு செய்தமை நினைந்து வருந்தி மொழிதலின், “பன்னுமனத்தால் பரிசிழந்த பாதகனேன்” என்றும் கூறுகின்றார். நல்லற நன்னெறியின் நீங்கிய கோணலான செயல் பாதகமாகும்; அதனைச் செய்தமையால் மனம் செம்மை யெய்தும் திறமிழந் தொழிந்த தீமை கருதி “பரிசிழந்த பாதகம்” என்கின்றார். இழத்தற் கேதுவாகிய பாதகம் எனப் பொருள்படுதலின், இழந்த என்பது ஏதுப்பொருட்கண் வந்த எஞ்சு பெயர்க்கிளவி என அறிக. மேன்மேலும் குற்றம் பெருகுவிப்பது பற்றித் “துன்னு மலம்” என்கின்றார். மலத்தால் தணிக்கவியலாத வேட்கை யுண்டானதுபற்றி, அதனை வெயிலவனாக்கி, “மல வெங்கதிரோன் சோடையினால்” என்று உரைக்கின்றார். சோடை - வெப்பம். வெயில் வெம்மையால் வேட்கை மிக்கு நீர் வேண்டுவோன் அது பெறாதவிடத்து நிலை தடுமாறி அறிவயர்ந்து கெடுவானாதலால், “நின் அருணீர் வேட்டு நிலை கலங்கி வாடுகின்றேன்” என்று முறையிடுகின்றார். நெடிது வருந்தியும் திருவருள் எய்தாமையின், “இன்னம் அறியாயோ” எனப் புலம்புகின்றார்.
இதன்கண், மலச்சோடையால் உளதாய அருணீர் வேட்கையை விளம்பியவாறு. (17)
|