74. களித்து நின் திருக் கழலிணை யேழையேன்
காண்பனோ அலதன்பை
ஒளித்து வன்றுய ருழப்பனோ வின்னதென்
றுணர்ந்திலே னருட்போதம்
தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே
தேவர்கள் பணி தேவே
தளிர்த்த தண்பொழில் தணிகையில் வளர்
சிவ தாருவே மயிலோனே.
உரை: தழைத்துத் தண்ணிதாய் விளங்கும் பொழில்கள் நிறைந்த தணிகைப் பதியில் வளர்ந்தோங்கும் சிவமாகிய கற்ப தருவே, மயிலை ஊர்தியாக வுடையவனே, திருவருள் ஞானத்தைத் தெளிய வுணர்த்தி நிற்கும் குரு வுருவே, தேவர்கள் வணங்கும் தேவனே, நின் திருவடிகள் இரண்டையும் ஏழையாகிய யான் மனம் களித்தின்புறக் காண்பேனோ? அல்லது நின்பால் அன்பின்றி மிக்க துயரம் உறுவேனோ? இன்னது ஆகுமென உணர மாட்டேனா யுள்ளேன், எ. று.
தளிரும் இலையும் பூவும் தழைத்து நிழல் பயந்து நிற்கும் பொழிலை “தளிர்த்த தண்பொழில்” என்று புகல்கின்றார். பொழிலிடை வளர்ந்து நிற்பது கற்பக மரமாம் உவம நலம் குறித்துத் “தண் பொழில் தணிகையில் வளர் சிவதருவே” என்று சிறப்பிக்கின்றார். சிவஞான போகங்களை நல்குபவனாதலால் முருகப் பெருமானைச் “சிவதரு” என்று கூறுகிறார். தொழப்படும் தேவர்களால் தொழப்படும் சிறப்புப் பற்றி, “தேவர்கள் பணி தேவே” என வுரைக்கின்றார். அகத்தியன் முதலிய முனிபுங்கவர்க்குச்சிவ தருமம் அருளியது நினைவிற் கொண்டு “அருட் போதம் தெளித்து நின்றிடும் தேசிக வடிவமே” என்று புகழ்கின்றார். தேசிக வடிவம் - குரு மூர்த்தம். “அறிதோறு அறியாமை” காணப்படுதல் போலத் தம்பால் அறியாமை காண்டலின் தம்மை “ஏழையேன்” எனவும், அதனால் முருகப்பெருமான் கழலிணைகளைக் கண்டு களிக்க முடியுமோ என ஐயமுறுமாறு தோன்ற, “நின் திருக் கழலிணை களித்துக் காண்பனோ” என்றும் கூறுகிறார். களித்துக் காண்பனோ என்பதைக் கண்டு களிப்பனோ என இயைப்பினும் அமையும். உள்ளத் தெழும் அன்பு வளர்த்தற்கும் கெடுத்தற்கும் உரியதாகலின், அன்பை வளர்க்காமல் கெடுத்தப் பெருந்துன்பத்தை எய்துவேனோ என்பார், “அன்பை ஒளித்து வன் துயர் உழப்பனோ” எனக் கூறுகிறார். எதிர்வில் நிகழ விருப்பதை முன்னுறவுணரும் அறிவில்லாமையால் “இன்ன தென்றுணர்கிலேன்” என்று முடிக்கின்றார். முக்காலமும் உணர்ந்த பெருமானாதலால் எனது அன்பை வளர்த்துக் கழலிணைகளைக் கண்டுகளிக்க அருள வேண்டும் என்பது குறிப்பு.
இதனால் தமது உள்ளத்தில் உளதாகும் அன்பு கெடாது பெருகி முருகன் திருவடிகளைக் கண்டு இன்புறும் பேறு நல்க வேண்டுமென விண்ணப்பித்தவாறாம். (3)
|