740.

     கல்லை நிகராம் கடைமனம்போம் கான்நெறியில்
     புல்லை மதித் தையோபைம் பூஇழந்த பொய்யடியேன்
     ஒல்லைபடு கின்ற ஒறுவே தனைதனக்கோர்
     எல்லை யறியேன் எழுத்தறியும் பெருமானே.

உரை:

     எழுத்தறியும் பெருமானே, கல்லைப் போன்ற கடைப் பட்ட என்னுடைய மனம் செல்லுகின்ற காட்டு வழியில் காணப்படுகின்ற புல்லிடைப் பூத்த பூவைப் பொருளாக மதித்து நற்பூவைக் கைவிட்ட பொய்யான வொழுக்கமுடைய அடியனேன் விரைந்து தாக்குகின்ற மிக்க துன்பத்துக்கு முடிவு காணாது வருந்துகிறேன். எ.று.

     உருக்கமும் தெளிவும் இல்லாமையால் கீழ்மை யுற்ற மனத்தைக் “கல்லை நிகராம் கடைப்பட்ட மனம்” என்றும், அது காட்டுவது கல்லும் முள்ளும் நிறைந்த செம்மையில்லாத தீய வழியாதல்பற்றி, “காண் நெறி” என்றும், வழியில் புற் பூடுகட் கிடையே காணப்படுகின்ற மணமில்லாத வாடிய பூக்களை நல்லவையாக எண்ணியதோடு நில்லாமல் ஆங்காங்கு இனிது தண்ணியவாய் நறுவியவாய் அழகியவாய்க் காணப்பட்ட தண்ணறும் பூக்களைக் கொய்யாமற் கை நெகிழ்ந்தேன் என்பாராய், “புல்லை மதித்துப் பைம் பூ விழந்த பொய்யடியேன்” என்றும் புகல்கின்றார். செய்த தவற்றுக்கு வருந்தும் குறிப்புப் புலப்பட “ஐயோ” என்கின்றார். கான் நெறி யெனவே, கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் பொருந்தி நேரிதல்லாத வழியென்பது பெற்றாம். கான் நெறியிற் புல்லைக்கொண்டு பைம்பூ இழந்தமை கூறியதனால், தண்ணிய நெறியில் வண்ணப் பூக்களைப் பறியாமல் கைவிட்டமை பெற்றாம். மனம் கடைப்பட்ட தென்றமையின் அதனிடை நிலவும் அன்பு பொய்யாதல் தோன்றப் “பொய்யடியேன்” என வுரைக்கின்றார். பொய்யான மனமும் புல்லிய நெறியும் உடையாரைத் துன்பம் விரைந்து தாக்கி மிக்க நோய் செய்வது பற்றி, “ஒல்லைபடுகின்ற ஒறுவேதனை” என்று கூறுகின்றார். ஒறுவேதனை-பிறர் துன்புறுத்த உளதாகும் நோய். தானாக வரும் நோய் தன்னால் பிறர் வருந்துகின்றார்களா எனக் காண்பதில்லை; மிகவும் வருத்த வேண்டுமென் றெண்ணிப் பிறராற் செய்யப்படுகின்றமையின், ஒறு வேதனை, பிறர் காண விடாது தொடர்தலால் இதற்கோர் “எல்லை காணேன்” என ஏங்குகின்றார்.

     இதன்கண், புற்பூவை மதித்து நறும் பூவைக் கையிழந்து எய்தும் ஒறு வேதனைக்கு எல்லை காணாது வருந்துகின்றமை கூறியவாறு.

     (18)