741.

     பொன்னைமதித் தையாநின் பொன்னடியைப் போற்றாத
     கன்னிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன்
     இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழைகண்டாய்
     என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே.

உரை:

     எழுத்தறியும் பெருமானே, பொன்னையே பெறற்குரிய பொருளாக வெண்ணி நின்னுடைய பொன் போன்ற திருவடியை வழிபடாமல் கல்போன்ற நெஞ்சுடைமையால் கலக்க முறுகின்ற கைதவமுடையவன்; அதனால், துன்புறுகின்ற ஏழை மக்கள் எல்லோரினும் மிக்க ஏழையாவேன்; ஆதலால் என்னைக் கைவிடுதல் கூடாது எ.று.

     இறைவன் திருவடி பொன் போன்றதாயினும், பெறலாகும் பொருள்களில் பொன் உயர்ந்த தென்றெண்ணினேன் என்பது புலப்பட, “பொன்னை மதித்து” என்றும், அதனால் ஈசன் திருவடியை வழிபடாதொழிந்தேன் என்பாராய், “நின் பொன்னடியைப் போற்றாத” என்றும், இரக்கமும் ஈகையும் இன்றிக் கற்போல் உறைந்தமை தோன்றக் “கன்னிகரும் நெஞ்சால்” என்றும், அதனை உணர்ந்து வருந்துகின்றமை விளங்க, “கலங்குகின்ற கைதவனேன்” என்றும் கூறுகின்றார். கைதவம் - வஞ்சனை. அகத்தில் அன்பிலனாய், புறத்தே அஃது உடையான்போல் ஒழுகுவது புலப்பட, “கைதவன்” என்கின்றார். பொருளல்லதைப் பொருளாக மதித்து, கைதவம் புரிந்த குற்றத்துக்குப் பயன் துன்பமாதலின், தாம் உறும் துன்பத்தை “இன்னல் உழக்கின்ற ஏழைக்கும் ஏழையானேன்” என்றும், என் குற்றம் உணர்ந்துரைத்துப் புகலடைந்தேன்; ஆகவே அடியேனைக் கைவிடலாகாது என்றற்கு, “என்னை விடாதே” எனவும் வேண்டுகின்றார்.

     இதன்கண், தாம் செய்த குற்றம் எடுத்தோதி, அதனால் எய்திய துன்பத்தையும் சொல்லித் தன்னைக் கைவிடல் வேண்டா என இறைவனை வேண்டியவாறாம்.

     (19)