742. மாசுவரே என்னும் மலக்கடலில் வீழ்ந்துலகோர்
ஆசுவரே என்ன அலைவேனை ஆளாயேல்
கூசுவரே கைகொட்டிக் கூடிச் சிரித்தடியார்
ஏசுவரே ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
உரை: எழுத்தறியும் பெருமானே, குற்றமும் உவர்ப்பும் என வுரைக்கும் மலமாகிய கடலில் வீழ்ந்து, ஆ! சுவர் போன்றவரே என்று கண்டோர் இரங்குமாறு வருந்துகின்ற என்னை ஆட்கொள்ளாது கையொழிகுவையேல் தம்மையே நோக்கிக் கூசுவதோடு, நின்னுடைய அடியார்கள் தம்மிற் கூடிக் கைகொட்டிச் சிரித்து ஏசுவார்களே; அச் செயல்கட்கிடமின்றி ஆள்வாயாக. எ.று.
மாசு நிறைந்த கடல் என்றும், உவர்ப்பு மிக்க உவர்மண் கடல் என்றும் இகழப்படுவது மலமாகிய கடல் என்றற்கு, “மாசுவரே யென்னும் மலக்கடல்” என்று அருளறிஞர் கூறுவர். என்னைக் காணும் உலகவர், வீழாது நின்று நிலைபெறும் வலிய சுவர் என்று வியந்து கூறுவர் என்பார், “உலகோர் ஆ சுவர் என்பர்” என்கின்றார். யான் மலக் கடலில் வீழ்ந்து துன்பத்துள் மூழ்கி யலைகின்றே னென்பார், “அலைவேனை” என மொழிகின்றார். உலகவர் கண்டு இரங்க யான் துன்பத்தில் அலைகின்றேன்; நீ அருள் புரியாயாயின் நின்னுடைய அடியார்கள் நின்னையும் தம்மையும் நோக்கி உலகில் நிலவுதற்குக் கூசுவர் என்றற்கு “ஆளாயேல் கூசுவர்” எனவும், சிலர் தம்மிற் கூடி யான் அருள் பெறாமை கண்டு இகழ்வர் என்றற்குக் “கூடிக் கைகொட்டிச் சிரித்து ஏசுவர்” எனவும் உரைக்கின்றார்.
இதன்கண், யான் மலக்கடலில் வீழ்ந்து அலைவது கண்டு உலகோர் ஆ சுவரே என்று இரங்குவராக, அடியார்கள் கூடிச் சிரித்து ஏசுவர் என வருந்திக் கூறியவாறு. (20)
|