743.

     ஊர்சொல்வேன் பேர்சொல்வேன் உத்தமனே நின்திருத்தாள்
     சீர்சொல்வேன் என்றனைநீ சேர்க்கா தகற்றுவையேல்
     நேர்சொல்வாய் உன்றனக்கு நீதியீ தல்லஎன்றே
     யார்சொல்வார் ஐயா எழுத்தறியும் பெருமானே.

உரை:

     ஐயனாகிய எழுத்தறியும் பெருமானே, உத்தமனே, உனக்குரிய ஊரைச் சொல்வேன்; உனது பேரைச் சொல்வேன்; உனது திருவடியின் சீரைச் சொல்லிப் பரவுவேன்; எளியனாகிய என்னை நீ உன் திருமுன்பு சேரவிடாது விலக்குவாயேல், விலக்கியதை எனக்கு நேர் முகமாகச் சொல்லியருள்க; உனக்கு இது நீதி முறையாகாது என்று முற்போந்து சொல்ல வல்லவர் யாவர் உள்ளனர்? எ.று.

     உத்தமன் - உயர்வற வுயர்ந்தவன். சிவன் உறையும் திருப்பதிகளின் பெயரைப் பாட்டாகவும் உரையாகவும் பாடிப் பரவுவது இயல்பாதலின், அதனை மேற்கொண்டு பாடுவேன் என்பாராய், “ஊர் சொல்வேன்” என்றும், இறைவன் திருப்பெயர் பலவற்றை எடுத்தோதி வழிபடுவ துண்மையின், “பேர் சொல்வேன்” என்றும் கூறுகின்றார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர் பாடிய ஊர்த் தொகைப் பதிகங்களும், போற்றித் தாண்டகங்களும், மணிவாசகர் பாடிய அகவலும் பிறவும் இவற்றுக்கு எடுத்துக் காட்டாம். திருவடியைச் சிறப்பிக்கும் திருவிருத்தங்களும் திருத்தாண்டகங்களும் திருத்தாள் சீர் சொல்லும் திருப்பாட்டுக்குச் சான்றுகளாகும். இவை யெல்லாம் செய்ய வல்ல அடியேனைச் சேர்த்துக் கொள்ளாது விலக்குதற்கு முறையில்லை என்பாராய், “என்றனை நீ சேர்க்காது அகற்றுவையேல்” என்றும், “நேர் சொல்வாய்” என்றும் கூறுகின்றார். நேர் வந்து சொன்ன விடத்து, விலக்குவது முறையன்றெனச் சிலர் சொல்வரென அஞ்ச வேண்டா; நின்னை மறுத்து ெ்மாழிபவர் ஒருவரும் இலர் என்பாராய், “உன் தனக்கு நீதியீ தல்லவென்றே யார் சொல்வார்” என்று உரைக்கின்றார்.

     இதன்கண், எளியனாகிய என்னை நின் திருமுன் சேர்த்துக் கொண்டால் ஊர், பேர், திருவடியாகியவற்றை இனிது பாடுவேன்; என்னை ஏன்றுகொள் என்று வேண்டியவாறு.

     (21)