744.

     நீக்கமிலா மெய்யடியர் நேசமிலாப் பொய்யடியேன்
     ஊக்கமிலா நெஞ்சத்தின் ஒட்டகலச் செய்வாயேல்
     தூக்கமிலா ஆனந்தத் தூக்கம்அன்றி மற்றும்இங்கோர்
     ஏக்கமிலேன் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.

உரை:

     திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானே, நின்னை நீங்குதல் இல்லாத மெய்ம்மை சான்ற அடியவர்களின் நேசம் இல்லாத பொய்யொழுக்கமுடைய அடியேனுடைய நெஞ்சின்கண் திருவருள் இன்பப் பேற்றின்கண் ஊக்கம் கிடையாது; புலன்கள் மேற்செல்கின்ற ஆசை கொண்டு ஓடுவதே செயலாக உடையது; அதன் ஓட்டம் கெடச் செய்தருள்வாயாயின் சோர்விலாத சிவானந்தத் தேனுண்டிருக்கும் இன்ப நாட்டமன்றி இவ்விடத்தே வேறு ஏக்கம் இலனாவேன். எ.று.

     சிவபரம் பொருளின் திருவடியை நினைந்தவண்ணமிருக்கும் நிலையின் நீங்காத சான்றோரை, “நீக்கமிலா மெய்யடியார்” எனவும், அவரது நட்பினும் சிறந்தது பிறிதின்மை பற்றி “நேசமிலா” எனவும், அதற்கேது மனத்திடை யுளதாகும் பொய்ம்மை ஒழுகலாறு என்றற்குப் “பொய்யடியன்” எனவும் புகல்கின்றார். மெய்ம்மை சான்ற சிவானந்தப் பேற்றின்கண் இருத்தற்குரிய சிவஞான வேட்கை நெஞ்சில் இல்லாமையை “ஊக்கமிலா நெஞ்சத்தின்“ என்றும், அதற்கு ஏது நெஞ்சம் பசு பாசங்கண் மேற்செல்லும் செலவு என்றும், அது சிவனருளாலன்றி நீங்காமையின், “ஒட்டகலச் செய்வாயேல்” என்றும், பசுபாசங்களின் நீங்கிச் சிவத்தின்கண் சென்றொடுங்கி அசைவற்றிருக்கும் இன்ப நிலையை, “தூக்கமிலா ஆனந்தத் தூக்கம்” என்றும், அதனை யெய்தி இனிதிருப்பேன், விரும்புதற்கு வேறே பொருளின்மையின் ஒருவகை ஏக்கமும் இலனாவேன் என்பாராய், “மற்றும் இங்கோர் ஏக்கமிலேன்“ என்றும் இயம்புகின்றார்.

     இதன்கண், நெஞ்சின் ஓட்டமகன்று சிவானந்தத் தூக்கம் பெறுவதை விரும்புமாறு கூறப்படுவது காண்க.

     (22)