745. போகின்ற வஞ்சகரைப் போக்கிஉன்றன் பொன்அடிக்காள்
ஆகின்ற மேலோர் அடிவழுத்தா நாயேற்குப்
பாகின் தனிச்சுவையிற் பாங்காகும் நின்அருளை
ஈகின்ற தென்றோ எழுத்தறியும் பெருமானே.
உரை: எழுத்தறியும் பெருமானே, நன்னெறியின் நீங்கிப் போகின்ற வஞ்ச மனத்தாரை விலக்கி, உன்னுடைய அழகிய திருவடிக்கே உரியராகின்ற மேன்மக்களின் திருவடியை வழிபடாத நாயினேனுக்குப் பாகினும் தனிச் சுவையைச் சார்ந்தோங்கும் நற்சுவை யமைந்த நின் திருவருளை அருளும் நாளும் எந்நாளோ? அருளுக. எ.று.
நன்னெறியாகிய திருவருள் நெறியின் நில்லாமல் தீநெறிக்கண் செல்லும் தமது மனவேட்கையைப் புறத்தே வெளிப்படாமல் மறைத் தொழுகுவோரை, “போகின்ற வஞ்சகர்” என்றும், அவரது உறவை விலக்கற்குப் “போக்கி” என்றும், சிவபெருமான் திருவடிக்கண் நெஞ்சைப் பதித்து அதனையே வழிபடும் செந்நெறிக்கண் நிற்கும் சிவஞானச் செல்வ மேன்மக்களைப் “பொன்னடிக்காள் ஆகின்ற மேலோர்” என்றும் புகழ்ந்து பேசுகின்றார். அம் மேன்மக்கள் ஞான வொழுக்கங்களால் சிவமேயாதலின் அவர்களின் திருவடியை வணங்கி வழிபடுவதும் சிவ வழிபாடாக, அதனைச் செய்யாமைக்கு மனம் வருந்தி, “மேலோர் அடி வழுத்தா நாயேற்கு” என்று எடுத்துரைத்து எனக்கு நின் இனிய திருவருளை நல்குதல் வேண்டுமென்பாராய், “நின்னருளை ஈகின்றது என்றோ?” என விண்ணப்பிக்கின்றார். திருவருளின் சுவை நலத்தைத் தாம் நன்கறிந்து இரக்கின்றமை புலப்பட, “பாகின் தனிச் சுவையின் பாங்காகும் அருள்” என்று விளக்குகின்றார். பாகு - கருப்பஞ் சாற்றைக் காய்ச்சிப் பெறுவதாகிய வெல்லப் பாகு.
இதன்கண், இறைவன் திருவருளைப் பெறும் நாள் எந்நாள் என இறைஞ்சியவாறாம். (23)
|