746. ஊழை அகற்ற உளவறியாப் பொய்யன்இவன்
பீழைமனம் நம்மைப் பெறாத மனங்கொடிய
தாழைஎன எண்ணிஎனைத் தள்ளிவிட்டால் என்செய்வேன்
ஏழைநான் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
உரை: திருவொற்றியூரில் கோயில் கொண்டருளும் எழுத்தறியும் பெருமானே, ஊழையும் விலக்கக்கூடிய உளவுண்மை யறியாத பொய்யனாகிய இவனது பீழைபடும் மனம் நம்மை ஏலாது என்றும், அம் மனம் கொடிய தாழை போல்வது என்றும் சொல்லி என்னைப் புறம்பாகத் தள்ளிவிடுவாயாயின் ஏழையாகிய நான் என்ன செய்வேன்? எ.று.
ஊழாவது, ஒருவன் செய்த வினை பயன் முதிர்ந்து அவனால் நுகரப்படாமல் ஊழ்த்திருக்குமது; அதனைச் செய்தவன்பால் கூட்டி நுகர்விப்பவன் நேர்மை யுருவாய இறைவன்; அவன் தாளை வழிபட்டு ஊழ்த்த வினை தன்னைச் சேராதவாறு செய்வது “ஊழை யகற்றும் உளவு”. “இறைவன் புகழ் புரிபவரை இருவினையும் சேரா” எனத் திருவள்ளுவர் தம் நூலின் தொடக்கத்தேயே இவ்வுளவை முன்னமே மொழிந்திருப்பது உணர்க. அறிந்து வைத்தும் அறியானாய் ஒழுகுதல் பற்றிப் “பொய்யன் இவன்” என்றும், உணர்ந்ததை உள்ளத்திற் கொள்ளாது நெகிழ்ந்தவன் சிவஞான வுருவாகிய தமது திருவருளைக் கையுதிர்ப்பவன் என்றது புலப்பட, “இவன் பீழை மனம் நம்மைப் பெறாது” என்றும் உரைக்கின்றார். தாழை - மடலாற் பெரிய தாழை மலர்; இதனைப் பழைய நூல்கள் கைதை என வழங்கும். இறைவன் திருமுடியைக் காணமாட்டாது மீண்ட பிரமன், கண்டதாகப் பொய் சொல்ல, அப்பெருமான் திருமுடியினின்றும் கீழ்நோக்கிப் போந்த இக் கைதையம்பூ ‘ஆம்’ எனப் பொய்க்கரி கூறிச் சிவனால் விலகி குண்டது எனப் புராணிகர் கூறுவர். அதை நினைப்பிக்கும் வகையில் என் மனமும் தாழையென விலக்கப்படுமாயின் யான் ஒன்றும் செய்கலேன் என்பாராய், “தாழை யென எண்ணி என்னைத் தள்ளிவிட்டால் என் செய்வேன்” என்றும், “நான் ஏழை” என்றும் இசைக்கின்றார்.
இதன்கண், ஊழை யகற்றும் உளவு அறிந்தும் அது செய்யாது பொய்ப்பட்ட என்னை வெகுண்டு தள்ளிவிடலாது என வேண்டிக் கொண்டவாறு. (24)
|