747.

     மடுக்க முடியா மலஇருட்டில் சென்றுமனம்
     கடுக்கமுடி யாப்புலனால் கட்டிச் சுமக்கவைத்த
     தொடுக்க முடியாத துன்பச் சுமையைஇனி
     எடுக்கமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.

உரை:

     எழுத்தறியும் பெருமானே, நெருங்க முடியாத மலம் செய்யும் இருட்டில் மனம் புகுந்து, கடிந்து ஒதுக்க முடியாத புலன்களாற் பிணித்துச் சுமக்குமாறு வைக்கப்பட்டுள்ள வேறாக நீக்க முடியாத சுமையை இனி நான் எடுக்க முடியாமல் உள்ளேன். எ.று.

     மலம் அனாதி தொடர்பாய் நாம் சென்று தொடுவதும் விடுவதுமாய் இயைபுறுவதன்மையின் “மடுக்க முடியா மலம்” என்றும், அஃது அறிவை மறைத்து இருள் செய்வது பற்றி, “மல விருட்டில்” என்றும், மலத்தாற் சூழப்பட்ட மனம் எளிதில் அடக்க முடியாத ஐம்புலனால் பிணிப்புண்டிருக்குமாறு விளங்க, “மனம் கடுக்க முடியாப் புலனால் கட்டி” என்றும், புலன்களால் உண்டாகும் துன்பங்களைச் சுமையாக்கி அதனை உயிர் சுமக்குமாறு வைத்திருக்கும் திறத்தைச் “சுமக்க வைத்த தொடுக்க முடியாச் சுமையை” என்றும் உரைக்கின்றார். மடுத்தல் - நெருங்குதல். மலம் காரணமாக மாயா காரியமாய்ப் பின் வந்து புணர்ந்த கருவியாதலால் “மனம் சென்று மலவிருட்டை” யடைந்த தென்கின்றார். மனத்தின் வழிப் புலனும் புலன் வழி மனமும் மாறி மாறி நின்று வினைசெய்தல் பற்றி புலனால் கட்டிச் சுமக்க வைத்த துன்பச் சுமையென்று சொல்லுகின்றார். வினை விளைவாதலால், வினைத் திரளை துன்பச் சுமை என்று கூறுகின்றார். கடுத்தல் - ஈண்டு கடிந்து போக்குதல். கடி என்னும் சொல் இவ்வாய்பாட்டில் வருவதுண்டு. செய்வினைப் பயனைச் செய்தவனை விட்டுப் பிறப்பால் மாற்றி வைக்க முடியாமை தோன்ற, “தொடுக்க முடியாத துன்பச்சுவை” எனச் சொல்லுகின்றார். எடுத்தல் - தலையிற் சுமத்தல். வினை பெருகியதால் வினையாய துன்பம் சுமக்க முடியாத அளவில் கனத்தமை தோன்றத் “துன்பச் சுமையை இனி எடுக்க முடியாது” என மொழிகின்றார்.

     இதன்கண், மனம் புலனொடு பிணிப்புண்டு வினைசெய்து துன்பச் சுமையைச் சுமக்க முடியாத அளவிற் பெருக்கிக் கொண்டமை விளக்கியவாறு.

     (25)