748. முள்ளளவு நெஞ்ச முழுப்புலைய மாதர்களாம்
கள்ளளவு நாயில் கடைப்பட்ட என்றனக்கு
உள்ளளவும் அன்பர்க் குதவும்உன்தாட் கன்பொருசிற்
றெள்ளளவும் உண்டோ எழுத்தறியும் பெருமானே.
உரை: எழுத்தறியும் பெருமானே, முள்போல வருத்தும் நெஞ்சமும் முழுப்புலைத் தன்மையும் உடைய மகளிரிடத்தாம் காமக் கள்ளைக் குடிக்கும் நாயிற் கடைப்பட்ட எனக்கு உள்ள தெவ்வளவோ அவ்வளவில் அன்பர்கட் குதவும் உன் திருவடிக்கு அன்பு என்பால் ஒரு சிறிய எள்ளளவேனும் உளதோ, இல்லையே! எ.று.
குறு நினைவாற் சிறு சொற் சொல்லிப் பிறரை வருத்துவதே இயல்பாகவுடையவராதலின், மகளிர் நெஞ்சினை “முள்ளளவு நெஞ்சம்” எனவும், முழுக்க முழுக்கப் புலையுணவும் புலைச் சொல்லும் செயலுமுடைய ரென்றற்கு “முழுப் புலைய மாதர்கள்” எனவும் மொழிகின்றார். கள்ளுண்பார் அறிவிழந்து அலமருதல்போல மகளிர் நல்கும் காம நுகர்ச்சியையே நுகர்ந்து உறையும் தம்மை “மாதர்களாம் கள்ளளவும் என்றனக்கு” எனவும் இயம்புகின்றார். தம்முடைய நிலைமையைக் கீழ்மை பொருந்தியதாகக் கருதி, “நாயிற் கடைப்பட்ட என்றற்கு” எனக் குறித்து, தமக்குச் சிவன்பால் அன்பின்மையை இரப்பவும் பாரித்து, உன் தாட்கு அன்பு ஒரு சிறிய எள்ளளவும் இல்லை என்பாராய், “உன் தாட்கன்பு ஒரு சிற் றெள்ளளவும் உண்டோ” என உரைக்கின்றார்.
இதன்கண், மகளிர் நல்கும் காம நுகர்ச்சிக்கண் உள்ள அன்பளவில், இறைவன் திருவடிக்கன்பு ஒரு சிறு எள்ளளவும் இல்லை எனக் குறித்தவாறாம். (26)
|