749.

     பண்ண முடியாப் பரிபவங்கொண் டிவ்வுலகில்
     நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்
     உண்ணமுடி யாஅமுதாம் உன்னைஅன்றி எவ்வெவர்க்கும்
     எண்ணமுடி யாதே எழுத்தறியும் பெருமானே.

உரை:

     எழுத்தறியும் பெருமானே, இவ்வுலகிற் செய்ய முடியாத தீ வினைகளைச் செய்து பெருந்துன்பம் கொண்டுளேனாயினும் எய்த முடியாத திருவருள் நலம் விழைந்து மனம் வாடுகின்றேன்; உண்ண முடியாத திருவருளமுதத்தை உனது அருணோக்கத்தாலன்றி எத்தகைய தேவதேவரும் மனத்தே எண்ண முடியாதன்றோ? எ.று.

     பரிபவம் - பெருந் துன்பம். இதற்கு ஏது எளிதிற் செய்தலாகாத பெருந் தீ வினையாகும். வினை செய்யும் உலகம் நாம் பிறந்து வாழும் நிலவுலகமாதலின், இதனை “இவ்வுலகில்” எனச் சுட்டிக் கூறுகின்றார். தீவினை செய்தவர் பெருந்துன்பம் உழத்தல் முறையாதலால், “இவ்வுலகிற் பண்ண முடியாப் பரிபவம் கொண்டு வாடுகின்றேன்” எனவும்,மெய்யிற் பரிபவம் உற்றவிடத்தும் உள்ளத்தில் நற்றவத் தாலன்றிப் பிறவாற்றால் எய்த முடியாத திருவருணலத்தை விரும்பு மாற்றை, “நண்ண முடியா நலங்கருதி வாடுகின்றேன்” எனவும் உரைக்கின்றார். வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிப் பாற்கடலைக் கடைந்தன்றிப் பெறலாகாத் தேவாமுதத்தை “உண்ண முடியாவமுதம்” என்றும், கடையுமிடத் தெழுந்த நஞ்சைச் சிவபெருமான் உண்டருளியதால்தான் தேவர்கள் அமுதமுண்ண முடிந்த வரலாற்றை நினைவிற் கொண்டு “உன்னையன்றி எவ்வெவர்க்கும் எண்ண முடியாதே” என்றும் இசைக்கின்றார்.

     இதன்கண், இவ்வுலகில் நண்ண முடியா நலங்கருதி வாழும் எனக்கு உன்னையன்றி எண்ண முடியாது என முறையிட்டவாறு.

     (27)