75. மயிலின் மீதுவந் தருள்தரும் நின் திரு
வரவினுக் கெதிர் பார்க்கும்
செயலினேன் கருத் தெவ்வணம் முடியுமோ
தெரிகிலேன் என்செய்கேன்
அயிலின் மாமுதல் தடிந்திடும் ஐயனே
ஆறுமா முகத் தேவே
கயிலைநேர் திருத்தணிகையம் பதிதனில்
கந்த னென்றிருப் போனே.
உரை: கயிலை மலை போன்ற திருத்தணிகை மலையில் கந்தசாமிக் கடவுள் என்று சிறப்புற வீற்றிருப்பவனே, வேற்படை கொண்டு சூரனது மாமரத்தை வேரோடும் வீழ்த்திய ஐயனே, ஆறு முகங்களை யுடைய தேவனே, மயில் மேல் இவர்ந்து போந்து அன்பர்கட்கு வர மருளும் நின்னுடைய செல்வ வருகையை எதிர்பார்த்திருக்கும் செயலையே நாளும் உடையவனாய் இருக்கின்றேன்; என் எண்ணம் எவ்வாறு முடியுமோ, அறியேன்; அது கைகூடுதற்கு யான் செய்யத் தக்கதும் தெரியேன், எ. று.
சிவபிரானுக்குக் கயிலைமலை போல முருகப் பெருமானுக்குத் தணிகை மலை சிறந்த தென்பது தோன்ற, “கயிலைநேர் திருத் தணிகையம் பதிதனில் கந்தன் என்று இருப்போன்” என உரைக்கின்றார். கந்தன், என்றதைத் தமிழ்ச் சொல்லாகக் கொள்ளின் உயிர்கட்குப் பற்றுக் கோடாயவன் என்பது பொருளாம்; வடசொற் றிரிபாகக் கொள்ளின் ஆறுருவாய் இருந்து உமையம்மையால் ஆறு முகமும் பன்னிரு கையுமுடைய ஓருருவாய்ச் சேர்க்கப்பட்டவன் என்று பொருளாம். “அந்த மில்லதோர் மூவிரு வடிவும் ஒன்றாகிக் கந்தன் என்று பேர் பெற்றனன் கவுரிதன் குமரன்” (1. சரவணப். 21) என்று கந்தபுராணம் கூறுவது காண்க. அயில் - கூரிய வேற்படை. வேற்படையால் மாமரத்தை வீழ்த்தியதை, “மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து, எய்யா நல்லிசைச் செவ்வேற் சேய்” (முருகு) என்று நக்கீரர் நவில்கின்றார். அன்பால் நினைந்துருகு மடியார்க்கு மயில் மேல் எழுந்தருளிக் காட்சி நல்கும் முறைமை பற்றி, “மயிலின் மீது வந்து அருள்தரும் நின் திருவரவு” என்று சிறப்பிக்கின்றார். திருவருளாகிய ஞானப் பேறு எய்துதலால் முருகனது வரவு திருவரவு எனப்படுகிறது. மெய்யன்பர்களாகிய சான்றோர்க்கு வழங்கியது போலத் தனக்கும் காட்சி எய்து மென்னும் கருத்தால் நாளும் எதிர்பார்த் திருக்கும் தமது மனநிலையை, “நின் திருவரவு எதிர்பார்க்கும் செயலினேன்” என மொழிகின்றார். நினைந்தது நினைந்தவாறு நிகழ்தல் உலகியலிற் பெரும்பாலும் இல்லையாதலால், “என் கருத்து எவ்வணம் முடியுமோ தெரிகிலேன்” என்று தெரிவிக்கின்றார். சிந்தனை நன்கு செய்து திட்ட மிட்டுச் செய்யும் உலகியற் பொருள்கள் எண்ணியவாறு முடிவது போல முருகப் பெருமான் திருவரவு அமைவதன்றாதலால் வள்ளற் பெருமான் இவ்வாறு ஐயுறுகின்றார். செயற்கை வகையால் முருகனது திருவரவை எய்துவித்துக் கொள்ள லாகாமையால் “என் செய்வேன்” என்று கூறுகின்றார்.
இதனால் முருகப்பெருமான் மயிலூர்ந்து போந்தருளும் திருவரவை நாடோறும் எதிர்பார்க்கும் எண்ணம் புலப்படுத்தியவாறாம். (4)
|