750. வெங்கொளித்தேள் போன்ற வினையால் வெதும்பிமனம்
அங்கொளிக்கா துன்னை அழைத்தழுது வாடுகின்றேன்
இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்அருமை அப்பாநீ
எங்கொளித்தாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
உரை: திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானே, வெவ்விய கொள்ளித் தேள் போன்ற தீவினையால் மனம் வெம்மையுற்று, அவ் விடத்தே மறைந்தொழிதலின்றி உன்னைக் கூப்பிட்டுப் புலம்பி வாடுகின்றேன்; இவ்வுலகில் எவ்விடத்தும் ஒளிக்காமல் கடல் நஞ்சினை உண்டு மிடற்றில் ஒளித்த என்னுடைய அருமையான அப்பனே, நீ இப்போது எங்கே மறைந்திருக்கின்றாய்? எளியேன் காண எழுந்தருள்க. எ.று.
கொள்ளித் தேள் - செந்தேள். கொட்டியபோது கொள்ளி நெருப்புப் போல் வருத்துவதால் செந்தேள், “கொள்ளித்தேள்” என்று குறிக்கப்படுகிறது. தேளின் கொடுமை உடற்குட் பாய்ந்து உடம்பளவாய் நிற்ப, வினையின் கொடுமை உயிர் புகுமிடந்தோறும் தொடர்ந்து வருத்துதலின், மனத்தின்கண் அடக்கி யொடுக்காமல், “அங்கொளிக் காது உன்னை அழைத்தழுது வாடுகின்றேன்” என்று பகர்கின்றார். இவ்வுலகில் எங்கேனும் ஒளித்து வைத்தால் வாழும் உயிர்கட்குத் தீங்கு விளைக்குமென்ற அருள் மிகுதியால் கடல் நஞ்சினை மிடற்றினில் ஒடுக்கின திறத்தை நினைந்து மொழிதலின், “இங்கொளிக்கா நஞ்சமுண்ட என்னருமை அப்பா” என்று கூறுகின்றார். இக் கருத்தைக் “கடல் தனிலமுதொடு கலந்த நஞ்சை, மிடறினிலடக்கிய வேதியனே” (திருவாவடு) என ஞானசம்பந்தர் நவில்கின்றார். அழைத்தவிடத்து வாராமை பற்றி, “எங்கொளித்தாய்” என வினவுகின்றார்.
இதன்கண், உன்னை யழைத்தழுது வாடுமெனக்குத் திருவுருவைக் காட்டாது எங்கோ ஒளித்துக் கோடலாகா தென்பதாம். (28)
|