752.

     ஒல்லையே நஞ்சனைத்தும் உண்ட தயாநிதிநீ
     அல்லையோ நின்றிங் கயர்வேன்முன் வந்தொருசொல்
     சொல்லையோ ஒற்றியூர்த் தூயதிருக் கோயிலுள்நீ
     இல்லையோ ஐயா எழுத்தறியும் பெருமானே.

உரை:

     ஐயனாகிய எழுத்தறியும் பெருமானே, கடலிடத் தெழுந்த நஞ்சனைத்தையும் விரைந்துண்ட அருட் செல்வன் நீ யன்றோ; இவ் விடத்தே நின்று தளர்கின்ற எளியேன் முன்னே வந்து ஓர் இன்சொல் சொல்லுக; ஐயோ, திருவொற்றியூர்க் கோயிலுள்ளே நீ இல்லையோ, கூறுக. எ.று.

     பெரிய கடலளவாகிய பாலை, மலையை மத்தாக இட்டுக் கடைந்த வழித் தோன்றிய நஞ்சு எத்துணை யிருக்கும் அத்தனையும் தயங்காது உண்டதனை, “நஞ்சனைத்தும் ஒல்லையே உண்ட தயாநிதி நீ” என்றும், தேவர் தாம் வேண்டிய அமுதுண்டு உய்தல் வேண்டிக் கொண்ட அருள் காரணமாக நஞ்சுண்டானாதலால் “தயாநிதி நீ அல்லையோ” என்றும், தாம் இறைவன் திருமுன் நின்று மனமுருகி அயரும் திறத்தை “நின்றிங்கயர்வேன்” என்றும், அடியேன் முன் போந்தருளி ஓர் இன்சொல்லை அருளுக என வேண்டுவாராய், “முன்வந்து ஒருசொல் சொல்” என்றும் இறைஞ்சுகின்றார். விரும்பியவாறு ஒருசொல்லும் எய்தாமை கண்டு மனம் மிக வருந்தி, “ஐயோ” என்று கதறி, நான் வேண்டி அயரும் இப்போது நீ கோயிலின் நீங்கி வேறெங்கேனும் சென்றிருக்கிறாயோ எனக் கேட்கலுற்று, “ஒற்றியூர்த் திருக்கோயிலுள் நீ இல்லையோ” என்று வினவுகின்றார்.

     இதனால், நஞ்சுண்ட தயாநிதியாகிய நீ எளியேன் முன்வந்து ஒரு சொல் சொல்லுக என வேண்டியவாறு.

     (30)