753. நினையுடையாய் நீஅன்றி நேடில்எங்கும் இல்லாதாய்
மனையுடையார் மக்கள்எனும் வாழ்க்கையிடைப் பட்டவமே
இனையுடையான் என்றிங் கெனையாள்வ துன்கடனே
எனையுடையாய் ஒற்றி எழுத்தறியும் பெருமானே.
உரை: திருவொற்றியூரில் எழுந்தருளும் எழுத்தறியும் பெருமானே, என்னை யுடையவனே, உலகமெல்லாம் உடைய தலைவனே, உலகில் எங்கே தேடினும் நீ யன்றி வேறு ஒப்பொன்றும் இல்லாதவனே, மனை மக்கள் சூழ உடையவர் என்னும் வாழக்கை யிடைப்பட்டு வீணே வருந்துவதுடையன் என்று என்பால் இரக்கமுற்று, என்னை ஆள்வது உனக்குக் கடனாகும்.
உயிர் உடல் பொருள் என்ற மூன்றுமாகிய என்னை முற்றவும் உடையவனே என்பாராய், “எனையுடையாய்” என்றும், என்னையே யன்றி உலகனைத்தையும் உயிரனைத்தையும் எல்லாவற்றையும் உடைய முழுமுதற் கடவுளே என்றற்கு, “உடையாய்” என்றும், உனக்கு ஒப்பாரும் மிக்காரும் பிறர் உளரோ என உலகமுற்றும் நாடினும் உன்னை யன்றி வேறு பிறர் இல்லை என்பது துணிந்தமை தோன்ற, “நினை நேடில் நீயன்றி எங்கும் இல்லாதாய்” என்றும் இயம்புகின்றார். மனைவளம் மக்கட் செல்வம் முதலிய இல்வாழ்பவர்க்கு அமைந்தனவாயினும் அவை துன்ப வுருவினவாய் வீணே அவலம் செய்தலால் “மனையுடையார் மக்களுடையார் என்னும் வாழ்க்கை யிடைப்பட்டு அவமே இனையுடை யான்” என்றும், ஆகவே இவன் இரங்கத்தக்கவன் என்று திருவுள்ளத்திற் கொண்டு அருள் புரிவது இறைவனாகிய உனக்குக் கடன் என்பாராய், “என்று இங்கு எனையாள்வது உன் கடனே” என்றும் இயம்புகின்றார். இனைவு - வருத்துதல். இனை என முதனிலைப் பெயராய் நின்றது.
இதன்கண், மனையுடையார் மக்களுடையார் என்னும் மனை வாழ்விற் சிக்குண்டு அவமெய்தி இனைதலுடையன் என்று கண்டு அருள் புரிவது உனக்குக் கடன் என்று இறைவன்பால் முறையிட்டவாறு. (31)
|