17. நெஞ்சொடு நேர்தல்

திருவொற்றியூர்

    ஒருபால் உடலூழாக இயங்குவதும் ஒருபால் உணர்வுவழி நின்று உயர்வதும் நெஞ்சிற்கு இயல்பு. இருதலைப்பட்டு ஓடும் முறையை மாற்றி உணர்வு வழி நிற்குமாறு நெஞ்சினைத் தெருட்டுகின்றார், வடலூர் வள்ளல். அருள் நெறியினும் பொருள் வகைப்பட்ட காமநெறியில் செல்வது நெஞ்சிற்கு இனிதாக இருக்கிறது. அதற்காக இப் பத்தின்கண் வரும் கலி விருத்தம் பத்தினுள் மூன்று பாட்டுக்கள் நிற்கின்றன வாயினும், அருள் நெறியின்கண் பெரும்பாலன உள்ளன. நெஞ்சினைத் தம் பக்கல் நேர்விக்கப் பாடும் இப் பத்தினுள் யாவும் அந்தாதித் தொடையில் அழகுற அமைந்துள்ளன.

கலி விருத்தம்

754.

     ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம்
     பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால்
     மிக்க காமத்தின் வெம்மை யால்வரும்
     துக்க மியாவையும் தூர ஓடுமே.

உரை:

     நெஞ்சமே, ஒற்றியூர்க்கண் உறையும் படம்பக்க நாதனை, என் அறிவுடனொத்துப் பணிந்து வாழ்த்துவையாயின், மிக்க காமத்தால் உளதாகும் வெம்மையால் பிறக்கும் துன்பம் யாவையும் நீங்கித் தூரத்தே போய்விடும். எ.று.

     நினைவு சொல் செயல் மூன்றும் அறிவொடு கூடி ஒப்ப ஒழுக வேண்டுமென வற்புறுத்தற்கு “ஒக்க” என்று உரைக்கின்றார். பணிதல் மெய்யின் செயல்; வாழ்த்துதல் வாயின் செயல்; காமம் அளவின் மிக்க விடத்தே வேட்கையை மிகுவித்து அறிவுக் கண்ணை மறைத்துத் துன்பம் மிக விளைவிக்கும்; அதனை ‘மிக்க காமத்து மிடல்’ என்பர் தொல் காப்பியர். அளவொடு பட்ட காமம் அறத்தொடு பட்ட காதற் காமமாய் மனை வாழ்க்கைக்கும், மக்கட் பேற்றுக்கும் வேண்டப்படுவதாம். மிக்க காமம் பெருந்திணைக்குரிய பொருந்தாக் காமம். அதனால் பேராசை மிகுதலால் “மிக்க காமத்தின் வெம்மையால்” என்றும், அதனால் உண்டாவது பெருந் துன்பமாதலை “வெம்மையால் வரும் துக்கம்” என்றும் கூறுகின்றார். வெம்மை - ஈண்டுப் பேராசை மேற்று. நினைவும் அறிவும் ஒரு நெறிப்பட இறைவனை வழிபடுமிடத்து மிகைப்பட்ட காமத்துக்கு இடமின்றிக் கெடுதலால் துன்பம் சேணிற் சென்று ஒழியும் என்பாராய், “துக்கம் யாவையும் தூர ஓடுமே” என்று சொல்லுகின்றார்.

     இதனால், நெஞ்சும் அறிவும் ஒக்க நிற்ப வழிபடுவார்க்கு மிக்க காமத்து மிடல் கெடும் என்பதாம்.

     (1)