755.

     ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டிநீ
     நீடும் ஒற்றியூர் நிமலன் மூவர்கள்
     பாடும் எம்படம் பக்க நாதன்தாள்
     நாடு நாடிடில் நாடு நம்மதே.

உரை:

     ஒரு நெறிக்கண் நில்லாது ஓடுகின்ற நெஞ்சமே, உனக்கோர் உறுதி சொல்லுகிறேன்; கேள்; புகழால் நீடும் திருவொற்றியூர் நிமலனான மூவர்கள் பாடும் எங்கள் படம்பக்க நாதனுடைய திருவடிகளை நாடுவாயாக; அது செய்வாயாயின், இந்நாடு முழுதும் நம்முடைமையாகும். எ.று.

     பொறி புலன்கள் மேல் நில்லாது சென்று அலையும் இயல்பிற்றாதலின், நெஞ்சினை, “ஓடும் நெஞ்சமே” என்று உரைக்கின்றார். உறுதியாவது ஒன்று கூறுகின்றேன் கேள் எனப் பணிக்குமாறு தோன்ற, “ஒன்று கேட்டி நீ” என மொழிகின்றார். ஒற்றியூர், புகழால் மேன்மேலும் பெருமை பெறுவதென்றற்கு “நீடும் ஒற்றியூர்” எனவும், அங்கெழுந்தருளும் படம்பக்க நாதன் அடைந்தாரது மலம் கெடுத்து ஆள்பவன் என்ற குறிப்புத் தோன்ற “நிமலன்” எனவும், அவனைத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர் ஆகிய மூவரும் மொழிக்கு மொழி தித்திக்கப் பாடியது விளங்க, “மூவர்கள் பாடும் எம் படம் பக்கநாதன்” எனவும், அவன் திருவடியை நெஞ்சால் நாடுக என்பார், “நாதன் தாள் நாடு” எனவும், நாடுவார் பெறும் பயன் இந்த நாடு முற்றும் உடைமையாவது என்றற்கு “நாடிடில் நாடு நம்மதே” எனவும் எடுத்துக் கூறுகின்றார்.

     இதன்கண், மூவர் பாடும் படம் பக்க நாதன் தாளை நாடில் இந்த நாடு முற்றும் நமக்கு உடைமையாம் என்று அறிவுரைத்தவாறு.

     (2)