757. தம்ப லம்பெறும் தைய லார்கணால்
வெம்ப லந்தரும் வெய்ய நெஞ்சமே
அம்ப லத்தினில் அமுதை ஒற்றியூர்ச்
செம்ப லத்தைநீ சிந்தை செய்வையே.
உரை: தம்பலம் நல்கும் மகளிர் கண்களால் காமக் கொதிப்புண்டாகப் பெறும் வெய்ய மனமே, அம்பலத்தில் ஆடும் அமுது போன்றவனும், திருவொற்றியூரில் உறையும் செவ்விய பயனாக விளங்குபவனுமாகிய சிவத்தைச் சிந்திப்பாயாக. எ.று.
தம்மைக் கூடுதற்கு வரும் ஆடவர்கள் கையுறையோடு வெற்றிலை பாக்குத் தரப் பெறும் தையலார்களின் கட்பார்வை நல்கும் காம வுணர்ச்சியால் உண்டாகும் வெம்மைக் கொதிப்பு, “தையலார் கண்ணால் வெம்பல்” எனப்படுகிறது. வெம்பலம் ஈற்றில்அம்முச் சாரியை பெற்றது. பிறர் மனம் கவர்தல் வேண்டித் தம்மை எப்போதும் ஒப்பனை செய்து கொள்வது பற்றி மகளிரைத் “தையலார்” என்கின்றார். வெற்றிலை பாக்கு, தம்பலம் என வழங்கும். காம வேட்கைக் கிரையாகி வெம்மை மிகுவது பற்றி, “வெய்ய நெஞ்சமே” என்று விளம்புகின்றார். வெம்மை - வேட்கை. அமுதுண்ணப் பிறக்கும் நலத்தை கண்ணிற் கண்ட வழி நல்கும் நலம் நினைந்து, “அம்பலத்தினில் அமுது” என்றும், சிவத்தினிடத்தே பெறலாகும் சிவானந்தம் “செம்பலம்” என்றும், நினைக என்றற்குச் “சிந்தை செய்வையே” என்றும் உரைக்கின்றார்.
இதன்கண், மகளிர் கண்களால் மனக் கொதிப்படையும் நீ, சிவன் அருட் பார்வையால் செம்பலம் எய்துவாய் என்பதாம். (4)
|