758. செய்யும் வண்ணம்நீ தேறி நெஞ்சமே
உய்யும் வண்ணமாம் ஒற்றி யூர்க்குளே
மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பருள்
பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டுமே.
உரை: மக்களுயிர் உய்யுமாறு திருவொற்றியூர்க்கண் கோயில் கொண்டு, வருவார்க்குக் காட்சி தந்தருளும் மாணிக்க மலையாகிய படம் பக்க நாதன் அருள் வழங்கும் திறம் நோக்கி அத்திறத்தே நின்று பெறல் வேண்டுமாதலின், அதற்குரிய வழிபாட்டினை, நெஞ்சமே, செய்யும் முறைமை யாதென்று தெளிந்து செய்க. எ.று.
இறைவன் ஆங்காங்குக் கோயில் கொண்டு சகளத் திருமேனி கொண்டு விளங்குவது மக்களுயிர் வழிபட்டுய்தல் வேண்டும் என்ற கருத்தால் “உய்யும் வண்ணமாம்” எனவும், ஒற்றியூர்க்கண் மாணிக்கத் திருமேனியுடன் காட்சி தருமாறு புலப்பட, “ஒற்றியூர்க்குளே மெய்யும் வண்ணமா ணிக்க வெற்பு” எனவும் இயம்புகின்றார். சிவனைச் செந்நிற முடைமை பற்றி மாணிக்க மலையெனச் சான்றோர் கூறுப. “மருவார் கொன்ற மதி சூடி மாணிக்கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு” (கடவூர்) என நம்பியாரூரர் கூறுவது காண்க. வெற்பு - மலை. வெற்புப் போல்வாரை வெற்பென்கின்றார். மெய்த்தல் - காட்சிப் படல். அப்பெருமான் உயிர்கட்கு அருள் நல்கும் திறம் பலவாதலின், அதனை யறிந்து பெறல் வேண்டும் என்றற்கு, “அருள் பெய்யும் வண்ணமே பெறுதல் வேண்டும்” என அறிவுறுத்துகின்றார். இறைவன் அருளும் வண்ணம் மக்களாகிய நமக்கு அறியவாராமையின், நாம் செய்யத் தக்கது தெளிந்து செய்தல் வேண்டும்; அது தானும் செவ்விய வழி பாடன்றி வேறின்மையின், அதனைத் தெளிந்து செய்க என்பாராய், “செய்யும் வண்ணம் நெஞ்சமே, நீ தேறி” என்று தெரிவிக்கின்றார்.
இதன்கண், ஒற்றியூர்க்கண் மக்கள் உய்யும் வண்ணம் மாணிக்க வெற்பாய் சகளீகரித்திருக்கும் படம்பக்க நாதனைத் தெளிந்து வழிபாடு செய்க என்று வற்புறுத்தியவாறாம். (5)
|