759.

     வேண்டும் நெஞ்சமே மேவி ஒற்றியூர்
     ஆண்டு நின்றருள் அரசின் பொற்பதம்
     பூண்டு கொண்டுளே போற்றி நிற்பையேல்
     யாண்டும் துன்பம்நீ அடைதல் இல்லையே.

உரை:

     எனக்கு வேண்டிய நெஞ்சமே, ஒற்றியூர்க்குச் சென்று அவ்விடத்தே நிலையாக நின்று அருள் புரியும் சிவவேந்தின் அழகிய திருவடியை மனத்திற்கொண்டு போற்றுதல் செய்து நிற்பாயேல் நீ யாண்டும் துன்பமடைதல் இல்லையாம். எ.று.

     நண்பரை வேண்டியவரென்றும், நண்ணாரை வேண்டாதவர் என்றும் வரும் வழக்குப் பற்றி, அன்பினால் நெஞ்சினை நோக்கி, “வேண்டும் நெஞ்சமே” என்று குறிக்கின்றார். ஒற்றியூருக்கு நெஞ்சினைச் செலுத்துகின்ற வள்ளலார், அங்கே சிவன் இருந்தருளும் திறத்தை, “ஒற்றியூர் மேவி ஆண்டு நின்றருள் அரசு” என உரைக்கின்றார். இறைவன் புரிவது அருளாட்சி யென்றற்கு, “அருள் அரசு” என்று இயம்புகின்றார். இறைவன் திருவடியைச் சிந்தையிற்கொண்டு போற்றுக என அறிவிப்பாராய், “பொற்பதம் உள்ளே பூண்டுகொண்டு போற்றி நிற்பையேல்” எனவும், போற்றி நின்றவழி எக்காலத்தும் எவ்விடத்தும் துன்புறுதல் இல்லையாம் என்பாராய், “யாண்டும் துன்பம் நீ அடைதல் இல்லையே” எனவும் இசைக்கின்றார். இத் திருப்பாட்டு “வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பையில” என்ற திருக்குறளை நினைப்பிப்பது காண்க.

     இதன்கண், ஒற்றியூர் ஈசன் பொற் பதத்தை நெஞ்சிற் கொண்டு போற்றி நின்றால் யாண்டும் துன்பமில்லை என வற்புறுத்தியவாறாம்.

     (6)