76.

    இருப்பு நெஞ்சகக் கொடியனேன் பிழைதனை
        எண்ணுறேல் இனி வஞ்சக்
    கருப் புகாவணம் காத்தருள் ஐயனே
        கருணையங் கடலே என்
    விருப்புள் ஊறிநின் றோங்கிய அமுதமே
        வேலுடை யெம்மானே
    தருப்புகா வினன் விலகுறும் தணிகை
        வாழ் சாந்த சற்குணக் குன்றே.

உரை:

     வானளாவி நிற்கும் மரச் செறிவால் சூரியன் புகாமல் விலகிச் செல்லும் தணிகை மலையில் எழுந்தருளும் சாந்தம் பொருந்திய சற்குணக் குன்றாகிய முருகப் பெருமானே, வேற்படையை யுடைய எங்கள் தலைவனே, என்னுடைய அன்பிற் சுரந்து பெருகும் அமுதமே, அருட் கடலே, ஐயனே, இரும்பு போன்ற நெஞ்சினை யுடைய கொடியவனாகிய என் தவறுகளைத் திருவுளத்திற்கொள்ளாமல், இனியாகிலும் வஞ்சம் மிக்க பிறவிக்குள் யான் புகாதபடி காத்தருள் வாயாக, எ. று.

     இரக்கமற்ற வலிய நெஞ்சினை யுடையவன் எனத் தன்னைக் கூறுவார், “இருப்பு நெஞ்சகக் கொடியனேன்” என்று கூறுகிறார். கொடுமை எண்ணமும் செயலுமுடையவன் என்பார், “கொடியனேன்” என்றும், செய்வன அனைத்தும் தவறுகள் எனற்குக் “கொடியனேன் பிழை” என்றும் குறிக்கின்றார். முருகப் பெருமானது பிழை பொறுக்கும் பெரும் பண்பு நோக்கிப் “பிழை எண்ணுறேல்” என்கிறார். எண்ணிய வழி உள்ளத்து நிறைந்துள்ள அருள் நலம் திரியு மென அஞ்சுகிறாராதலின், “எண்ணுறேல்” என்றும், என் கொடுமைக்கும் பிழைகட்கும் ஏது வஞ்சத்தை இயல்பாக வுடைய பிறவி என்பார், “வஞ்சகக் கரு” என்றும், மீண்டும் பிறப்புண்டேல் வஞ்சமும் கொடுமையும் பிழையுமே பெருகும் என்பார், “வஞ்சக் கருப்புகா வணம் காத்தருள்” என்றும் உரைக்கின்றார். அன்பர் அன்புக்குள் தோய்ந்து இன்ப ஞானத்தேன் சுரந்து மகிழ்விப்பது பற்றி முருகக் கடவுளை, “என் விருப்புள் ஊறிநின்றோங்கிய அமுதமே” என இசைக்கின்றார். கருவுக்குள் செறியும் இருட்கஞ்சி அதனுட் புகாவணம் காத்தருள் என வேண்டுகின்றா ராதலின், அக்கருத்தே நிலவத் தணிகை மலையிலுள்ள மரச் செறிவுக்குள் நிறையும் இருட் கஞ்சி ஞாயிறு விலகிச் செல்கிற தென்பார், “தருப்புகா இனன் விலகுறும் தணிகை” என வுரைக்கின்றார். ஊமைத் தசும்புள் நீர் நிறைந்தாற் போலச் சலனமின்றி் யிருக்கும் மன நிலை சாந்தம்; அது வேண்டுதல் வேண்டாமை யற்ற நிலையாதலால் அதற்குரிய மெய்ம்மைப் பண்புருவில் திகழும் பெருமானாவது பற்றிச் “சாந்த சற்குணக் குன்றே” என்று பரவுகின்றார்.

     இதனால் வஞ்சவிருள் நிறைந்து கொடுமைப் பண்பு, செயல்கட்கு இடமாதலின் மீண்டும் பிறவி எய்தாவகை அருள வேண்டுமென்ற எண்ணம் புலப்படுத்தியவாறாம்.

     (5)