761. மேலை அந்தகன் வெய்ய தூதுவர்
ஓலை காட்டுமுன் ஒற்றி யூரில்வாழ்
பாலை சேர்படம் பக்க நாதர்தம்
காலை நாடிநற் கதியின் நிற்பையே.
உரை: மேலை வரற்குரிய நமனுடைய கொடிய தூதுவர் போந்து நாள் முடிந்ததற்கென இறுதி யோலை காட்டி உயிர்கொண்டு போதற்கு முன் திருவொற்றியூரில் வாழ்கின்ற உமையொரு பாகம் சேர்ந்த படம் பக்க நாதருடைய திருவடியை நாடியடைகுவையாயின் நல்ல சிவகதியில் நின்று இன்புறுவாய். எ.று.
வாழ்நாள் முடிவு நோக்கி வரும் நமனை “மேலையந்தகன்” என்றும் அவனுடைய தூதர் கண்ணோட்டம் சிறிதுமின்றித் தம் பணியைச் செய்வது பற்றி “வெய்ய தூதுவர்” என்றும், வாழ்நாள் முடிந்தமை காட்டும் ஓலையைக் காட்டி உயிரைக் கவர்ப என்பதனால் “ஓலை காட்டு முன்” என்றும் உரைக்கின்றார். இடப்பால் அமர்தலின் உமை நங்கை பாலை எனப்படுகின்றாள். என்றும் மாறா இளமை யுடையளாதலால் இவ்வாறு குறிக்கின்றார். எனினுமாம். பாலை, வாலை என்பன இளமை குறிக்கும் பெண்பாற் பெயர். கால் - திருவடி. நாடற்கு எளிமை தோன்ற, திருவடியைக் “கால்” எனவும், அது நல்கும் மேன்மையை “நாடி நற்கதி நிற்பையே” எனவும் அறிவிக்கின்றார்.
இதன்கண், யமதூதர் போந்து உயிர் கொண்டு, போகுமுன் படம் பக்க நாதர் திருவடி நாடிச் சிவகதியில் நிற்றல் வேண்டும் என்பதாம். (8)
|