762. நிற்ப தென்றுநீ நீல நெஞ்சமே
அற்ப மாதர்தம் அவலம் நீங்கியே
சி்ற்ப ரன்திருத் தில்லை அம்பலப்
பொற்பன் ஒற்றியில் புகுந்து போற்றியே.
உரை: கருகிய நெஞ்சமே, மகளிரால் உண்டாகும் அவலத்தின் நீங்கிச் சிற்பரனும் தில்லையம்பலத்தில் மேவும் பொற்புடையவனுமான சிவபெருமானை நீ ஒற்றியூர்க் கோயிற் குட்புகுந்து போற்றி செய்து வணங்கி நிற்பது எப்போது கூறுக. எ.று.
குற்றமான நினைவுகளால் நெஞ்சு கருகிவிடும் என்பவாகலின், நீல நெஞ்சம் என்கின்றார். புல்லிய பொருள்கட்கெல்லாம் ஆசை வைத்துப் பிணங்கி ஆடவர்க்கு அல்லலும் அவலமும் செய்தலின் மகளிரை “அற்ப மாதர்” என்றும், அவர் செய்யும் மனநோயை “அவலம்” என்றும், அதனால் திருந்திய செயல் கைகூடாது கெடுதலின், “நீங்குக” என்றும் இயம்புகின்றார். சிற்பரன் - ஞானத்தால் மேலாயவன். தில்லையம்பலத்தில் பொன்னிற மேனியழகனாய்க் காட்சி தருவது புலப்பட, “தில்லையம்பலப் பொற்பன்” எனவும் அவனை ஒற்றிநகர்க் கோயிற் குட்புகுந்து பணிந்து பரவுக என்றற்கு “ஒற்றியிற் புகுந்து போற்றி” எனவும் மொழிந்து, இப் பராவலை இன்றே சென்று செய்க என வற்புறுத்தும் கருத்துடன் “நிற்பது என்று” என வினவுகின்றார்.
இதனால், தில்லையம்பலப் பொற்பனை ஒற்றியூர்க் கோயிற்குட் புகுந்து பணிக என்பதாம். (9)
|