765. கண்ண னோடயன் காண்பரும் சுடரே
கந்தன் என்னும்ஓர் கனிதரும் தருவே
எண்ண மேதகும் அன்பர்தம் துணையே
இலங்கும் திவ்விய எண்குணப் பொருப்பே
அண்ணலேதிரு ஆலங்காட் டுறையும்
அம்மை அப்பனே அடியனேன் தன்னைத்
திண்ண மேஅடித் தொழும்பனாய்ச் செய்வாய்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
உரை: வளம் திகழும் திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் சிவபெருமானே, திருமாலும் பிரமனும் காண்டற் கரிய சுடராய் விளங்குபவனே, கந்தவேள் என்ற ஒரு ஞானக் கனியை நல்கும் கற்பக மரம் போல்பவனே, எண்ணங்களால் மேன்மையுறும் அன்பர் கட்குத் துணையாகியவனே, சிறந்து விளங்கும் தெய்வ வியல்பினவாகிய எண்வகைக் குணங்கள் திரண்ட மலைபோல்பவனே, தலைவனே, திருவாலங் காட்டில் எழுந்தருளும் அம்மையப்பனே, அடியவனாகிய என்னைத் திருவடிக்குத் தொண்டனாமாறு திண்ணமாகச் செய்தருள்க. எ.று.
திருமால் எடுத்த பிறவி பத்தினுள் கண்ணனாகிய பிறப்பு ஒன்று; அதனால் திருமாலைக் கண்ணன் என்று குறிக்கின்றார். கண்ணன் என்ற தமிழ்ச்சொற்பொருள் வடமொழியில் கிருஷ்ணன் என வழங்கும். பிரமன் திருமால் என்ற இருவர்க்கும் முடியும் அடியும் தேடியறியாதபடி உயர்ந்தோங்கிய ஒளிதிகழும் தூணாய் நின்றமையின் “கண்ணனோடு அயன் காண்பருஞ் சுடரே” என்று கூறுகின்றார். காண்டல் - காண்பு என வந்தது. “காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே” (சிவ.பு.) என்று திருவாசகம் உரைப்பது காண்க. முருகப் பெருமானுக்குக் கந்தன், கந்தவேள் என்பன பெயர். ஞானம் கனிந்த மூர்த்தமாதலின், கந்தவேளைக் கனியெனவும், அப்பெருமானைப் பெற்ற தந்தையாதலால், “கந்தன் என்னும் ஓர் கனி தரும் தருவே” எனவும் கட்டுரைக்கின்றார். தரு - மரம்; தெய்வ வுலகத்துச் சிறந்த தரு கற்பக தரு என்றலின், தரு என்றற்குக் கறபகதரு என்று கொண்டாம். சிவ சிந்தனையால் மேம்பட்ட அன்பர்கட்குத் தனிப் பெருந்துணைவனாதல் பற்றிச் சிவனை “எண்ண மேதகும் அன்பர்தம் துணை” என்று இயம்புகின்றார். எண்ணத்தால் மேதக்க அன்பரை, எண்ண மேதகும் அன்பர் என்று வள்ளற் பிரான் வனைந்துரைக்கின்றார். சிவாகமங்களில் சிவபெருமானுக்கென வரைந்துரைக்கும் எண்குணங்களும் திரண்டு ஒரு மூர்த்தமாய் விளங்கும் திருவுருவை, “இலங்கும் திவ்விய எண்குணப் பொருப்பே, என மொழிகின்றார். மக்களுலகில் எவர்க்கும் இல்லாமையின், “திவ்விய எண் குணம்” என்று சிறப்பிக்கின்றார். எண்குணமாவன - தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை எனப் பரிமேலழகர் உரைக்கும் இவை. குணத்தைக் குன்றென்றும் மலையென்றும் கூறுவது மரபாதலால் “குணப் பொருப்பே” என்று கூறுகின்றார். திருவாலங்காடு, தொண்டை நாட்டுத் திருப்பதிகளில் ஒன்று. “சொற்போரில், ஓலங்காட்டும் பழையனூர் நீலி வாதடக்கும் ஆலங்காடு” (விண். கலி.) என்று வள்ளலார் குறிக்கின்றார். திண்ணமே செய்வாய் என இயையும் சலிப்பின்றி நிலைத்த தொண்டனாதல் வேண்டுமென்பது விருப்பாதலால் “அடித்தொழும்பனாய்த் திண்ணமே செய்வாய்” என வேண்டுகின்றார்.
இதனால், சிவபெருமானுக்கு அடித் தொழும்பனாவதில் தமக்குள்ள ஆர்வத்தை வள்ளலார் வெளியிடுகின்றார். (2)
|