766.

     விடங்க லந்தருள் மிடறுடை யவனே
          வேதன் மால்புகழ் விடையுடை யவனே
     கடங்க லந்தமா உரியுடை யவனே
          கந்த னைத்தரும் கனிவுடை யவனே
     இடங்க லந்தபெண் கூறுடை யவனே
          எழில்கொள் சாமத்தின் இசையுடை யவனே
     திடங்க லந்தகூர் மழுவுடை யவனே
          திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

உரை:

     வளம் திகழும் திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் சிவபெருமானே, வன்மை மிக்க கூரிய மழுப்படையை யுடையவனே, அழகிய சாம வேதத்தின் இசைக்குரியவனே, இடப்பாகத்தே பெண்ணொரு பாகம் கொண்டவனே, கந்தவேளை யுலகிற்கு அளிக்கும் அருளுள்ள முடையவனே, மதம் பொழியும் யானையின் தோலைப் போர்வையாக வுடையவனே, பிரமனும் திருமாலும் புகழ்கின்ற எருதை ஊர்தியாகக் கொண்டவனே, நஞ்சேற்றுத் தேவர்க்கு அருள் செய்யும் கழுத்தை யுடைய பெருமானே. எ.று.

     இங்ஙனம் புகழ்மாலையாகத் தொடுக்கப்படுவதை ஆர்வ மொழியணி என்பர் மாறனலங்கார முடையார். மிடறு விடம் கலந்ததாயினும், உலகிற்கு அருள் புரியும் நலமுடைய தென்றற்கு விடங்கலந்து அருள் மிடறுடையவன் என்கின்றார். வேண்டுமிடங்கட் கெல்லாம் விரைந்து கொணரும் அறவடிவினதாதலால், இடப வூர்தியை விதந்து “வேதன் மால் புகழ் விடை யுடையவனே என்று விளம்புகின்றார். யானை யுருவம் மதம் பொழிதலு முடையனாகிய கயமுகாசுரனைக் கொன்று உரித்துக் கொண்ட தோலாதல் புலப்பட, “கடம் கலந்த மாவுரி உடையவன்” என்று குறிக்கின்றார். உடையெனப் பொதுப்பட மொழியினும், போர்வை மாவுரி யெனவும், உடை புலித்தோல் எனவும் கொள்க. கடம் கலந்த மா, யானைக்கு வெளிப்படை. தேவர்கள் பட்ட துன்பம் கண்டு பிறந்த இரக்கத்தால் முருகவேள் தரப்பட்டமை பற்றி “கந்தனைத் தரும் கனிவு உடையவனே” என்று இசைக்கின்றார். கனிவு - இரக்கமிகுதி. உயிர்கள் ஆணும் பெண்ணுமாய்த் தோன்றி உலகிய லொழுக்கம் புரிதல் வேண்டி, உமாதேவியை உடலில் ஒரு கூறாகக் கொண்டமை விளங்க, “இடம் கலந்த பெண் கூறுடையவனே” என்றும், சாம வேத கீதம் ஓதுவதில் விருப்பினராதலால், “எழில்கொள் சாமத்தின் இசையுடையவனே” என்றும், கையில் மழுப்படையைச் சிறப்பாக உடையவனாதலால் “திடம் கலந்த கூர் மழுவுடையவன்” என்றும் போற்றுகின்றார். “தயங்கு சோதி சாமவேதா” (வலிவலம்) என்று ஞானசம்பந்தர் பாடுவது காண்க.

     இதன்கண், சிவனுடைய புகழ்க்குரிய பல்வேறு அருட்செயற் குறிப்புக்கள் உரைத்தவாறு காண்க.

     (3)