767. கஞ்ச னோர்தலை நகத்தடர்த் தவனே
காமன் வெந்திடக் கண்விழித் தவனே
தஞ்ச மானவர்க் கருள்செயும் பரனே
சாமிக் கோர்திருத் தந்தையா னவனே
நஞ்சம் ஆர்மணி கண்டனே எவைக்கும்
நாத னேசிவ ஞானிகட் கரசே
செஞ்சொல் மாமறை ஏத்துறும் பதனே
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
உரை: வளம் திகழும் திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் சிவபெருமானே, பிரமன் தலைகளில் ஒன்றைக் கைந்நகத்தாற் கிள்ளி யெறிந்தவனே, காமவேள் வெந்தழியுமாறு நெற்றிக்கண்ணைத் திறந்து நோக்கினவனே, தஞ்சமென்று சரண் புகுந்தோர்க்கு அருள் புரியும் பரமனே, சாமியாகிய முருகவேட்குத் தந்தையாக விளங்குபவனே, விடம் பொருந்திய நீலமணி போன்ற கழுத்தையுடையவனே, எல்லாப் பொருட்கும் நாதனானவனே, சிவஞானிகட்குத் தலைவனே, செஞ்சொற் களாலான மறைகள் துதிக்கும் பாதத்தை யுடையவனே. எ.று.
பிரமன் தாமரை மலர்மேல் இருப்பது பற்றிக் கஞ்சன் எனப்படுகின்றான். அவற்குத் தலை ஐந்தென்றும், ஒன்றைச் சிவன் கைந் நகத்தாற் கிள்ளி யெறிந்தனன் என்றும் புராணிகர் கூறுதலின், “கஞ்சன் ஓர் தலை நகத்து அடர்த்தவனே” என்று கூறுகின்றார். வேறு கருவி கொண்டறுத்தால் அறுபடாதென்பது பற்றி “நகத் தடர்த்தவனே” என்று சிறப்பிக்கின்றார். சிவன் செய்த யோகத்தைக் கலைக்க முயன்ற குற்றத்துக்காக வெகுண்டு நெற்றிக் கண்ணைத் திறந்து நோக்கவே காமன் எரிந்துபோன செய்தி இங்கே குறிக்கப்படுகிறது. தஞ்சம் என்று சிவன் சேவடி சிந்தித்துப் புகல் புகுந்த மேலோர்களை ஆதரிக்கும் அருணலம் புலப்பட, “தஞ்சமானவர்க்கு அருள் செயும் பரனே என்று” சாற்றுகின்றார். சாமி - முருகனுக்குரிய பெயர்களில் ஒன்று. “சாமி தாதை சரணாகு மென்று தலை “சாய்மினோ” (புகலூர்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. நஞ்சுண்டதனால் கறுத்த கழுத்து நீலமணியின் நிறமும் ஒளியும் பெற்ற சிறப்பை நயந்து “நீலமார் மணிகண்டனே” எனப் பரவுகின்றார். எவ்வுயிர்க்குமே யன்றி எப்பொருட்கும் தலைவனாதல் பற்றி, “எவைக்கும் நாதனே” என்று இயம்புகின்றார். செய்யுளின்பம் நோக்கிச் சாரியை தொக்கது. ஞானநாயகனாதலின் “சிவஞானிகட்கரசே” என்று செப்புகின்றார். “காட்டுப்பள்ளி ஞானநாயகனைச் சென்று நண்ணுமே” என நாவுக்கரசர் நவில்வது காண்க. “வேதர் வேத மெல்லாம் முறையால் விரித்தோத நின்ற ஒருவனார்” (பாராய்த்) என ஞானசம்பந்தர் முதலியோர் உரைத்தலின், “செஞ்சொல் மாமறை ஏத்துறும் பதன்” என மொழிகின்றார்.
இதுவும் மேலைச் செய்யுள்போல இறைவன் அருட்செயல்களையே ஓதிப் புகழ்கிறது. (4)
|