769.

     ஆறு வாண்முகத் தமுதெழும் கடலே
          அயனும் மாலும்நின் றறிவரும் பொருளே
     ஏறு மீதுவந் தேறும்எம் அரசே
          எந்தை யேஎமை ஏன்றுகொள் இறையே
     வீறு கொன்றையும் சடையுடைக் கனியே
          வேதம் நாறிய மென்மலர்ப் பதனே
     தேறு நெஞ்சினர் நாள்தொறும் வாழ்த்தத்
          திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

உரை:

     தெளிந்த மனமுடைய சான்றோர் நாள்தோறும் வாழ்த்திட விளங்கும் திருவொற்றியூரிற் கோயில் கொண்டுறையும் சிவபெருமானே. ஒளி மிக்க முகம் ஆறு கொண்ட முருகனாகிய அமுதம் பிறந்த கடல் போன்றவனே, பிரமனும் திருமாலும் உருமாறி நின்றும் அறிதற் கரிதாகிய பரம்பொருளே, இடபத்தின் மேல் விருப்புடன் இவர்ந்து வரும் எங்கள் அரசே, எந்தையே, எங்களை அடியராக ஏற்றுக்கொள்ளும் இறைவனே, தனிச் சிறப்புடைய கொன்றை மாலை சூடிய சடையை யுடைய கனி போல்பவனே, வேதங்கள் பரவுகின்ற மென்மையான மலர் போன்ற பாதங்களை யுடையவனே. எ.று.

     முருகனை அமுதென்றமையின் அவனுக்குப் பிறப்பிடமாதல் பற்றிச் சிவபெருமானை “அமு தெழும் கடலே” என்று புகழ்கின்றார். அடி முடி காணமாட்டாராய் அயர்ந்து நின்று போற்றியும் எளிதில் அறிய மாட்டாராயினமை விளங்க, அயனும் மாலும் நின்று அறிவரும் பொருளே” என வுரைக்கின்றார். அறவுருவாகியது பற்றி விடை மேல் சிவன் விரும்பி இவர்வது புலப்பட, “ஏறுமீது உவந்து ஏறும் எம் அரசே” என்று இயம்புகின்றார். ஞான நடை நல்குதலின் சிவனை அரசு எனல் பொருத்தமாயிற்று. “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடன்” (புறம்) என்று சான்றோர் கூறுவர். சிவன்பால் மனம் திரும்பி அன்பு கொண்டு வழிபடுவாரைத் தனக்குரிய தொண்டராக ஏற்றுகொள்வது அவற்கு இயல்பாதல் கண்டு “எந்தையே எமை ஏன்று கொள் இறையே” என்று புகழ்கின்றார். சடையுடைக் கனியென்பது, பலாச்சுளையை மூடியிருக்கும் சடையையும் உள்ளுற்ற கனியையும் நினைப்பிக்கின்றது. வேதங்கள் சிவனுடைய திருவடியைப் பணிந்து பரவுதலின், “வேதம் நாறிய மென் மலர்ப் பதனே” என்று இயம்புகின்றார். பதன் - பாதங்களை யுடையவன்.

     இதன்கண்ணும் சிவன் திருப்புகழ் பாடுதலே கருத்தாதல் கொள்க.

     (6)