77.

    குன்றுநேர் பிணித் துயரினால் வருந்திநின்
        குரை கழல் கருதாத
    துன்று வஞ்சகக் கள்ளனே னெஞ்சகத்
        துயரறுத் தருள் செய்வான்
    இன்று மாமயின் மீதினில் ஏறியிவ் வேழைமுன்
        வருவாயேல்
    நன்று நன்றதற் கென்சொல்வார் தணிகைவாழ்
        நாத நின்னடியாரே.

உரை:

     தணிகை மலையில் எழுந்தருளும் நாதனே, மலைபோல் தோன்றும் நோய் விளைவிக்கும் துன்பத்தால் மனம் வருந்தி, உன்னுடைய ஒலிக்கும் வீரக்கண்டை யணிந்த திருவடிகளை நினையாத, நிறைந்த வஞ்சகமும் கள்ளத் தன்மையும் பொருந்திய நெஞ்சின்கண் நின்று வருத்தும் துயரத்தைப் போக்கும் பொருட்டு இப்பொழுது நீ அழகிய மயில்மேல் இவர்ந்து ஏழையாகிய என் முன் வந்தருள்வாயாயின், மிகவும் நன்றாம்; நின்னுடைய அடியார்கள் நன்று நன்றென்று நின் அருளைப் பாராட்டுவதன்றி வேறே என்ன சொல்லுவார்கள்! எ. று.

     புற வுலகநிகழ்ச்சிகளையோ, அகத்தே நிறைந் தெழும் எண்ணங்களையோ நோக்காமல் தன்னையே நினையுமாறு மனத்தைப் பிணித்துக் கொள்வது பற்றி நோயைப் “பிணி” என்பது தமிழ் வழக்கு. சிறிதாயினும் மலைபோற் பெருகித் தோன்றும் இயல்பு கருதிக், “குன்று நேர் பிணி” எனவும், அதனால் எய்தும் வருத்தத்தைப் “பிணித் துயர்” எனவும் கூறுகிறார். உடற்குற்ற பிணி செய்யும் வருத்தம் மனத்தைக் கவ்விக் கொள்ளும் போது, நினைக்கும் கருவியாதலால், மனம் பிணியை யன்றி வேறு உலகியற் பொருளையே யன்றி இறைவனையும் நினைக்க விடாமையால் “நின் குரை கழல் கருதாத” என்று உரைக்கின்றார். நல்லது நாடாதாயினும் அல்லனவற்றை மறக்குமோ எனில், துயரால் வருந்து மிடத்தும் அதன்கண் படிந்து கிட்க்கும் வஞ்சமும் கள்ளமும் நீங்குவதில்லை என்றற்குத் “துன்று வஞ்சகக் கள்ளனேன் நெஞ்சகம்” என்றும், அவற்றின் மேல் பிணி செய்யும் துயரம் மிதந்து கொண்டு வருத்தும் என்பார், “நெஞ்சகத்துயர்” என்றும் இயம்புகின்றார். அருள் வழங்கும் இறைவன், துயரத்தையே யன்றி, உள்ளே மறைந்து கிடக்கும் கள்ளமும் வஞ்சமும் ஆகியவற்றையும் கெடுத்தழிப்பானாதலால், “நெஞ்சகத் துயர் அறுத்து அருள் செய்வான்” என எடுத்து மொழிகின்றார். “உள்ள மார்ந்த அடியார் தொழுதேத்த உகக்கும் அருள் தந்து எம் கள்ளமார்ந்து கழியப் பழி தீர்த்த கடவுள்” (புகலூர்) என்றும், “கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தியோ டுள்ளமொன்றி யுள்குவார் உளத்துளான்” (ஆரூர்) என்றும் ஞானசம்பந்தர் அறிவுறுப்பது காண்க. மயிலேறி வந்து முன்னின்று அருளுவதை மிகவும் நன்று என்று பாராட்டுவ ரென்பார், “வருவாயேல் நன்று நன்று” என்றும், அதனை நின் அடியவர் காணினும் இனிது பாராட்டுவரே யன்றித் தீது என மொழியார் என்பாராய், “நின் அடியவர் என் சொல்வார்” என்றும் இசைக்கின்றார். ஏழைக்கு அருள்புரிவதை எவரும் இகழார் என்றொரு நயமும் தோன்றுவது காண்க.

     இதனால் பிணியுற்று வருந்தும் என் மனத்துயர் நீக்கும் பொருட்டு மயிலேறி வந்தருள்க என்று விழைந்தவாறாம்.

     (6)