770. மாறு பூத்தஎன் நெஞ்சினைத் திருத்தி
மயக்கம் நீக்கிட வருகுவ தென்றோ
ஏறு பூத்தஎன் இன்னுயிர்க் குயிரே
யாவு மாகிநின் றிலங்கிய பொருளே
நீறு பூத்தொளி நிறைந்தவெண் நெருப்பே
நித்தி யானந்தர்க் குற்றநல் உறவே
சேறு பூத்தசெந் தாமரை முத்தம்
திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.
உரை: சேற்றிடை முளைத்துப் பூத்த செந்தாமரையும் முத்துக்களும் ஒளி திகழும் திருவொற்றியூரிற் கோயில் கொண்டுள்ள சிவ பெருமானே, எருதாகிய ஊர்திமேல் விளங்கும் என் உயிர்க்குயிராய் விளங்கும் பரமனே, எல்லாமாய் நின்று வயங்கும் மெய்ப்பொருளே, திருநீறணிந்து ஒளி நிறைந்து வெண்ணிறம் கொண்ட நெருப்புறு வாயவனே, நித்திய சிவயோகத்தால் ஆனந்தமுறும் சான்றோர்க்கு நல்ல உறவானவனே, மாறாய கருத்துக்களால் நிறைந்த என் நெஞ்சைத் திருத்தி அவற்றால் உளதாய மயக்கத்தைப் போக்க நீ எழுந்தருளுவது எப்போதோ, கூறுக. எ.று.
தாமரையை வடமொழியில் பங்கயம் என்பர்; அதன் பொருள் சேற்றில் முளைப்பது என்பது; அக்கருத்துப்பற்றி இங்கே “சேறு பூத்த செந்தாமரை” யென்றும், தாமரை மலரின் ஒளியையும், சேற்றிற் சங்கினை யீன்ற முத்தின் ஒளியையும் இங்கே விதந்து, “சேறு பூத்த செந்தாமரை முத்தம் திகழும் ஒற்றியூர்” என்றும் சிறப்பிக்கின்றார். தாமரை யிடத்து முத்துப் பிறக்கும் என்பாருமுண்டு. மலமாசுகள் படிதலால் நெஞ்சின்கண் சிவத்துக்கு மாறாய வுணர்வுகள் படிந்து மயக்குவதுபற்றி, “மாறு பூத்த என் நெஞ்சினைத் திருத்தி மயக்கம் நீக்கிட வருகுவ தென்றோ” என முறையிடுகின்றார். மயக்கம் நீக்க வருதலாவது திருவருள் ஞானவொளி பரப்பித் தூய்மை செய்து சிவநெறியிற் செல்வித்தலென அறிக. இறைவன் ஏறும் எருது அறத்தின் வடிவமாய் அவனை உயிர் தோறும் உய்த்து அறவுணர்வு நிலவச் செய்யும் முறைமை தோன்ற, “ஏறு பூத்த என் இன்னுயிர்க் குயிரே” என்கின்றார். உயிர் உயிர் உணர்வு வடிவிற்றாதலின், உயிர்க்குயிர் என்பது “அறிவினுள் அருளால் மன்னி” ஞான நல்கும் நற்பான்மையென அறிதல் வேண்டும். உணர்வுடையனவும் இல்லனவுமாகிய எல்லாப் பொருள் களிலும் ஒன்றாயும் உடனாயும் கலந்திருக்குமாறு பற்றி, “யாவுமாகி நின்று இலங்கிய பொருளே” எனப் புகல்கின்றார். வெள்ளிய நீறணிந்த செம்மேனியனாதலால், “நீறு பூத்து ஒளி நிறைந்த வெண்ணெருப்பே” எனச் சொல்லழகு சொட்ட வுரைக்கின்றார். நித்தியானந்தர் - சிவயோகம் பெற்று அதன் பயனாகிய சிவபோகத்தை இடையறாது துய்க்கும் சிவானந்தச் செல்வர்கள். அவர்கள் வேறு தாம் வேறு என்பதின்றி ஒன்றியுடனாய் உறுபவராதலால், “நித்தியானந்தர்க்கு உற்ற நல்லுறவே” என்று உரைத்தருள்கின்றார்.
இதன்கண், மலமாயை கன்மங்களால் மாசுற்று மாறுபட்டு மயங்கும் மயக்கம் நீக்கற்குச் சிவன் திருவருள் எய்தும் போதினை நோக்குமாறு காண்க. (7)
|