771.

     மாலின் கண்மலர் மலர்திருப் பதனே
          மயலின் மேல்வரு மகவுடை யவனே
     ஆலின் கீழ்அறம் அருள்புரிந் தவனே
          அரஎன் போர்களை அடிமைகொள் பவனே
     காலில் கூற்றுதைத் தருள்செயும் சிவனே
          கடவு ளேநெற்றிக் கண்ணுடை யவனே
     சேலின் நீள்வயல் செறிந்தெழில் ஓங்கித்
          திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

உரை:

     சேல் மீன்கள் வயல்கள் செறிந்து எழில் மிகுந்து விளங்கும் ஒற்றியூர்க்கண் கோயில் கொண்டருளும் சிவபெருமானே, நீ திருமாலின் கண்ணாகிய மலர் கிடந்து மலரும் திருவடிகளை யுடையவன்; மயில் மேல் ஊர்ந்து வரும் முருகனாகிய மகவையுடையவன்; கல்லாலின் கீழ் குரு வடிவில் எழுந்தருளி அறத்தை அருளியவன்; அரகர என்று வழிபடுவோர்களை அடித்தொண்டராக வுடையவன்; காலால் யமனை உதைத்து வீழ்த்தி மார்க்கண்டற்கு அருள் செய்யும் சிவன்; கடவுள்; நெற்றியிற் கண்ணுடையவன். எ.று.

     நீர் வளம் மிக்க வூராதலின் “சேலின் நீள்வயல் செறிந்து எழில் ஓங்கித் திகழும் ஒற்றியூர்” என்று உரைக்கின்றார். நீர் இடையறவின்றிப் பாய்ந்திருத்தலால் சேல் மீன்கள் வாழ்வது கண்டு “சேலின் நீள் வயல்” என்றும், வயல்களில் நெல்லும் கரும்பும் வளர்ந்து பசுமைப் பொலிவுற்று அழகுமிக் கோங்குதல் குறித்தற்கு “எழில் ஓங்கித் திகழும் ஒற்றியூர்” என்றும் இயம்புகின்றார். திருமால் ஆயிரம் மலர் கொண்டு சிவனை வழிபட்ட காலை ஒன்று குறைய அதன் பொருட்டுத் தன் மலர் போன்ற கண்ணைப் பிடுங்கி வைத்து அருச்சித்தமையின், “மாலின் கண் மலர் மலர் திருப்பாதனே” என்று இசைக்கின்றார். முருகற்கு ஊர்தி மயிலாதலால் “மயிலின்மேல்வரு மகவுடையவனே” என்றும், முருகனைக் குழவிப் பருவத்தில் வைத்துக் கும்பிடுமாறு தோன்ற “மகவு” என்றும் இயம்புகின்றார். பிரமன் புதல்வர்களான முனிவர் நால்வர்க்குச் சிவன் ஆலின்கீழ் இருந்து அறம் கூறிய திறம் விதந்து, “ஆலின்கீழ் அறம் அருள் புரிந்தவனே” எனக் கூறுகின்றார். அடிமை கோடல் - திருவடியே எப்போதும் நினையும் தன்மையுடையராகச் செய்து கோடல். மார்க்கண்டன் உயிர் கவர்வான் போந்த கூற்றுவனைக் காலால் உதைத்து வீழ்த்திய செயல் நினைந்து, “காலில் கூற்றுதைத்து” எனவும், அக்கூற்றுவனுக்கே மீள அருள் செய்தமை பற்றி, “அருள் செயும் சிவனே” எனவும் இயம்புகின்றார். சிந்தையும் மொழியும் செல்லா நிலையினன் சிவனாதலால், “கடவுளே” என்றும், நெருப்பை நெற்றியிற் கண்ணாகக் கொண்டிருத்தலின் நெற்றிக் கண்ணுடையவனே என்றும் கூறுகின்றார்.

     இதனால், திருவொற்றியூர்ச் சிவபிரான் கடவுளாயினும் சிவனாய் அன்பர் வழிபாடேற்று அடிமை கோடலும் அறமுறைத்தலும் பிறவும் அருளுகின்றான் என்பதாம்.

     (8)