773.

     அம்ப லத்துள்நின் றாடவல் லானே
          ஆன்இ வர்ந்துவந் தருள்புரி பவனே
     சம்பு சங்கர சிவசிவ என்போர்
          தங்கள் உள்ளகம் சார்ந்திருப் பவனே
     தும்பை வன்னியம் சடைமுடி யவனே
          தூய னேபரஞ் சோதியே எங்கள்
     செம்பொ னேசெழும் பவளமா மலையே
          திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே.

உரை:

     வளம் திகழும் திருவொற்றியூரிற் கோயில் கொண்டருளும் சிவபெருமானே, நீ அம்பலத்தில் நிலையாக நின்று ஆட வல்லவன்; எருதேறி வந்து அருள் செய்பவன்; சம்பு, சங்கர, சிவசிவ என்று ஓதும் அன்பர் மனத்தகத்தைச் சார்ந்திருப்பவன்; தும்பையும் வன்னியு மாகியவற்றாலாகிய மாலையைச் சடையில் அணிந்தவன்; தூயவன்; பரஞ்சோதி; எங்கட்குச் சிவந்த பொன் போன்றவன்; செழுமையான பெரிய பவள மாமலையாக விளங்குபவன். எ.று.

     பிறரெல்லாம் எங்கும் ஆடுவாராக, சிவபெருமான் ஞானகாசமாகிய அம்பலத்தில் நிலைத்த ஞான நாடகம் புரிபவனாதல் பற்றி “அம்பலத்துள் நின்று ஆட வல்லான்” என்று கூறுகின்றார். தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டிய சோழ வேந்தனான முதல் இராசராசன் “ஆட வல்லான்” என்ற திருப்பெயரின்பால் மிக்க ஈடுபாடுடையவன்; அவனதாட்சியில் அளவைகள் அளவு கோல்கள் முதலியவற்றை “ஆட வல்லான்” என்ற பெயரிட்டே வழங்கினான். ஆன் - எருது. சி்வ பெருமான் எருதிவர்ந்து போந்து அருள் புரிவது பற்றி, “ஆன் இவர்ந்து வந்து அருள் புரிபவன்” என்கின்றார். சித்தத்தைச் சிவன்பாலே வைத்த பெருமக்கள் எப்போதும் சம்பு, சங்கரா, சிவசிவ என்று சிந்திப்பதும் ஓதுவதும் செய்வர்; சிவனும் அவர் மனத்தின்கண்ணே கூடி வீற்றிருப்பன்; “சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன் நேரிழையோடும் கூடி” (வல்லம்) என்று ஞானசம்பந்தர் கூறுவர். தும்பை, வன்னி, கொன்றை, மத்தம் முதலிய பல்வகைப் பூக்களை முடியிற் சடையில் அணிவதுபற்றித் “தும்பை வன்னியம் சடை முடியவனே” என்று துதிக்கின்றார். ஆர்வ மிகுதியால் சிவனைத் தூயனே பரஞ்சோதியே எனவும், செம்பொன்னே எனவும், பவள மலையே எனவும் பரவுகின்றார்.

     இதன்கண், வள்ளலார் ஆர்வம் மீதூர்ந்த பல்வகையிற் பாடிப் பரவுதல் பெறுகின்றோம்.

     (10)