775.

     தண்ணார் நீபத் தாரா னொடும்எம்
          தாயோ டும்தான் அமர்கின்ற
     கண்ணார் கோலம் கண்டு களிப்பான்
          கருதும் எமக்கொன் றருளானேல்
     பண்ணார் இன்சொல் பதிகம் கொண்டு
          படிக்கா சளித்த பரமன்ஓர்
     பெண்ணார் பாகன் ஒற்றித் தியாகப்
          பெருமான் பிச்சைப் பெருமானே.

உரை:

     பண்ணமைந்த இனிய சொற்களாலாகிய திருப்பதியங்களை ஏற்றுக்கொண்டு கால நிலைமை மாறியது கண்டு வீழிமிழலையில் ஞானசம்பந்தர்க்கும் நாவுக்கரசர்க்கும் நாடோறும் காசு அளித்த பரமனும் ஒப்பற்ற பெண்ணாகிய உமாதேவியை உடலில் ஒரு கூறாகக் கொண்டவனும் ஆகிய திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாகேசப்பெருமான், குளிர்ந்த கடம்ப மாலையையுடைய முருகனோடும் நமக்கெல்லாம் தாயாய் அருள்புரியும் அம்மையோடும் தானுமாக அமர்ந்திருந்து நல்கும் கண்ணிறைந்த காட்சியைக் கண்டு இன்புறுதற்கு விரும்பும் எமக்கு ஒரு காட்சி தந்து அருளானாயின், அவன் பிச்சைப்பெருமான் என்பது தேற்றமாம், எ.று.

     நீபத்தார் - கடம்ப மலராலாகிய மாலை; அது மிக்க குளிர்ச்சியும் அழகும் கொண்டது பற்றி, அதனை யணியும் முருகனைத் “தண்ணார் நீபத் தாரான்” என்று புகழ்கின்றார். உலகுயிர்கட்கு வாழ்வளித்துதவும் பேரருட் பெருமாட்டியாயினும், அவட்கும் மக்களாகிய நமக்குமுள்ள தொடர்பு விளங்க, “எம் தாய்” என்று சிறப்பிக்கின்றார். ஒருபால் தானும் ஒருபால் அம்மையும் இடையில் முருகனும் அமர்ந்திருக்கும் அரிய காட்சி தூய அன்பு ஒளிறும் காட்சியாதலின் அதனைக் “கண்ணார் கோலம்” என்றும், மெய்ம்மையன்பின் ஒளி திகழும் கோலத்தைக் காண்டற் கெழுந்த ஆர்வத்தை விதந்து, “கண்டு களிப்பான் கருதும் எமக்” கென்றும் இசைக்கின்றார். பாடற்கு இயைபு அமைந்தது பண்; இனிய தூய சொற்களாலாவது பாட்டு. இரண்டும் செவ்வே யமைந்தமை புலப்பட, “பண்ணார் இன்சொற் பதிகம்” என்று கூறுகின்றார். பத்துப் பாட்டுகளைக் கொண்டது பதிகம்; இது புதிது தோன்றிய வழக்கு. மூவர் முதலிகளை அடுத்த காலத்தில் இப் பாட்டுக்கள் சிவபெருமான் எழுந்தருளிய திருப்பதிகள் பொருளாகத் தோன்றினமை பற்றிப் பதியம் என வழங்கினர். அந்நாளைய அரசியற் சூழலும் திருப்பதியம் என்றும், அவற்றைப் பண்ணுறப் பாடுவதை விண்ணப்பம் செய்வதென்றும் வழங்கிற்று. பிற்காலத்தே பதியம் பதிகமாயிற்று. பாடுவது ஓதுவதென்றாயிற்று. வள்ளலார் காலத்தில் தமிழ் தூய்மை சிதைந்து வட சொல்லும் திசைச் சொல்லும் மிகக்கலந்து நிலவினமையின், பண்சுமந்த திருப்பதியங்களைப் “பண்ணார் இன்சொற் பதிகம்” என்று பகர்கின்றார். “தமிழ் கேட்குமிச்சையாற் காசு நித்தம் நல்கினீர்” என்று சுந்தரமூர்த்திகள் வீழிமிழலைத் திருப்பதியத்திற் குறித்துரைத்தலால் வள்ளற்பெருமானும் “பண்ணார் இன்சொற் பதிகம் கொண்டு படிக்காசளித்த பரமன்” என்று பரிவோடு கூறுகின்றார். உலகளித்தற் பொருட்டு மலைமகளை மணந்து தன் திருமேனியில் ஒருகூறு தந்தமைபற்றி, “ஓர் பெண்ணார் பாகன்” எனப் புகல்கின்றார். பட்டாடையும் நூலுடையும் மக்கள் உடுக்கத் தந்து, தான் புலித்தோலும் யானைத் தோலும் கொள்வதும், சந்தனமும் கத்தூரியும் பிறவும் பிறர் கொள்ளத்தான் சாம்பற் பூச்சுக்கோடலும், பொற்பணியும் மணிமாலையும் பிறர் கொள்ளத்தான் பாம்பையும் என்பு மாலையையும் அணிவதும், பிறரெல்லாம் அமுதுண்ணத் தான் நஞ்சுண்பதும் ஆகிய செயல் வகைகளால் சிவபிரான் தியாக மூர்த்தியாய்த் திகழ்தல் பற்றி, “தியாகப் பெருமான்” எனப்படுகின்றார்.

     (2)