776.

     பத்தர்க் கருளும் பாவையொ டும்வேல்
          பாலனொ டும்தான் அமர்கின்ற
     நித்தக் கோலம் கண்டு களிப்பான்
          நினைக்கும் எமக்கொன் றருளானேல்
     சித்தப் பெருமான் தில்லைப் பெருமான்
          தெய்வப் பெருமான் சிவபெருமான்
     பித்தப் பெருமான் ஒற்றித் தியாகப்
          பெருமான் பிச்சைப் பெருமானே.

உரை:

     சித்தத்தில் கோயிற் கொள்பவனும் தில்லையில் உள்ளவனும், தெய்வங்கட்குத் தலையாயவனும், சிவபெருமானும், பித்தேற்றும் பெருமானும் ஆகிய திருவொற்றியூரில் வீற்றிருந்தருளும் தியாகப் பெருமான் பத்தர்களுக்கு அருள் வழங்கும் பாவையாகிய உமையம்மையோடும் வேலேந்தும் இளைஞனாகிய முருகனோடும் அமர்ந்திருக்கும் நித்தக் கோலத்தைக் கண்டு களித்தற்கு விரும்புகின்ற எங்கட்கு ஒரு காட்சி யருளானாயின் பிச்சைப்பெருமான் என்பது தேற்றமாம். எ.று.

     அன்பைக் குறிக்கும் பற்று என்ற தமிழ்ச்சொல் பத்து என வருவது கொண்டு, பற்றுடைய அடியார்களைப் “பத்துடையடியவர்” என நம்மாழ்வார் கூறுவர்; அதனால், பத்தர் என்ற சொல் பத்துடைய அடியவரைக் குறிப்பதாகக் கொள்க. அன்பு எனப் பொருள்படும் பக்தியையுடையவர் பத்தராவர் எனக் கூறி இது வடசொற் சிதைவாகக் கொள்வதும் உண்டு. பாவை போல அழகு மிக்குடைமை பற்றி உமையம்மையைப் “பாவை” என்கின்றார். வேற்பாலன் - வேற்படை யேந்தும் முருகன். இளைஞன் என்பதனால் பாலன் என்றும் கூறுகின்றார். நித்தக் கோலம் - என்றும் மாறாத கோலம். அம்மையும் அப்பனும் வளர்தலும் மூப்பும் இன்றி எப்போதும் ஒருதன்மையாயவர். அவ்வாறே முருகனும் என்றும் இளமை மாறாதவன். இதனால், இவர்கள் ஒருங்கிருந்து வழங்கும் காட்சி “நித்தக் கோலம்” என்று புகழப்படுகிறது. சித்தப்பெருமான் - பத்தர் சித்தத்தில் எழுந்தருளும் பெருமான்; சித்தர்களுக்கெல்லாம் பெரிய தலைவன் எனினும் அமையும். தில்லை - சிவபெருமான் திருக்கூத்தியற்றும் பொன்னம்பலம் உள்ள திருப்பதி. இது சிற்றம்பலம் எனவும், சிதம்பரம் எனவும் வழங்கும். தெய்வங்கட்கெல்லாம் தலையாய்ச் சிறந்தவனென்றற்குத் “தெய்வப் பெருமான்” என்று கூறுகின்றார். பித்தப் பெருமான், பித்தேற்றும் பெருமான். தன்பால் அன்புற்றார்க்கு அதனை மிக வளர்த்துக் கணமேனும் தன்னையின்றியமையாராக்குவது பற்றிப் “பித்தப் பெருமான்” என்கின்றார். மக்களைப் போல் வாதபித்த சிலேத்தும வுடம்புடையனல்லனாதலால், பித்தப் பெருமான் என்றதற்குப் பித்துடைய பெருமான் என்று பொருள்கோடல் பொருந்தா தென்றறிக. பிறர் அமுதுண்டல் வேண்டித் தான் நஞ்சுண்டமை பற்றிச் சிவனைத் தியாகப்பெருமான் என இயம்புகிறார்.

     (3)