777.

     மன்னும் கதிர்வேல் மகனா ரோடும்
          மலையா ளொடும்தான் வதிகின்ற
     துன்னும் கோலம் கண்டு களிப்பான்
          துதிக்கும் எமக்கொன் றருளானேல்
     மின்னும் சூலப் படையான் விடையான்
          வெள்ளி மலையொன் றதுஉடையான்
     பின்னும் சடையான் ஒற்றித் தியாகப்
          பெருமான் பிச்சைப் பெருமானே.

உரை:

     ஒளி வீசுகின்ற சூலப்படை யுடையவனும், விடையேறுபவனும், வெள்ளி மலையாகிய ஒன்றைத் தனக்கேயுடையவனும், பின்னியது போன்ற சடையையுடையவனும், ஆகிய திருவொற்றியூரில் எழுந்தருளும் தியாகப்பெருமான், மன்னிய ஒளி பொருந்திய வேலேந்திய மகனாகிய முருகப்பெருமானோடும் மலைமகளாகிய அம்பிகையோடும் தானுமாக வீற்றிருக்கின்ற அழகு நிறைந்த கோலத்தைக் காண்டல் வேண்டித் துதி செய்து பரவும் எமக்கு ஒரு காட்சி வழங்கானாயின், பிச்சைப் பெருமான் என்பது தேற்றமாம். எ.று.

     தீட்டியவிடத் தொளிர்வதும் அல்லாதபோது ஒளிர்தலின்மையுமுடைய ஏனை வீரர்படை போலாது, முருகனது வேற்படை எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய் நிலைத்த ஒளி திகழ்வது விளங்க, “மன்னும் கதிர்வேல்” என்றும், அதுவே முருகனுக்குச் சிறந்த படையாதல் உலகறிந்த உண்மையாதலின், “கதிர்வேல் மகனார்” என்றும் கூறுகின்றார். உமாதேவி மலையரசன் மகளாதலால் “மலையாள்” எனப்படுகின்றார். முருகனும் தேவியும் தானுமாக வீற்றிருக்கின்ற அன்புக் கோலத்தைத் “துன்னும் கோலம்” என்றுசொல்லித் துதிக்கின்றார். வதிதல் - தங்குதல். துன்னுதல் - நெருங்குதல்; ஈண்டு நிறைதற்பொருளில் அழகு நிறைவதைக் குறிக்கின்றது. “மின்னும் சூலப்படையான்” என்பதில் மின்னும் என்பதற்கு மன்னும் என்புழிக் கூறியதையே கூறிக் கொள்க. படையாகச் சூலத்தைக்கொண்டது போல ஊர்தியாக விடையுடையனாதலால் “விடையான்” என விளம்புகின்றார். வெள்ளிமலை இந்நாளில் கயிலைமலை எனப்படுகிறது. பலர் சென்று கண்டு வந்துள்ளார்கள். பொன்மலையென ஒன்று உண்மையின் “வெள்ளிமலையென்று” என உரைக்கின்றார். பொற்புரி கொண்டு பின்னியது போறலின், “பின்னும் சடையான்” என்கின்றார். பிஞ்ஞகம் என்ற கோலத்துக்கமைய விளங்குவது பற்றி இவ்வாறு கூறினாரெனினுமாம்.

     (4)